தீபாவளி பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது: 10 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தது






தீபாவளி பண்டிகைக்காக ரெயில் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன.

தீபாவளி பண்டிகை

நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, சென்னையில் இருந்து ரெயில் மற்றும் பஸ்களிலேயே அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

குறிப்பாக ரெயில்களில் பயணம் செய்ய விரும்புவோருக்கு, 120 நாட்களுக்கு முன்பாகவே ரெயிலில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி விடும்.

முன்பதிவு தொடக்கம்

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதற்குமுன்பாக வியாழக்கிழமையே பெரும்பாலானவர்கள் சொந்த ஊருக்கு படையெடுப்பார்கள்.

அந்த வகையில் தீபாவளி முன்பதிவு நேற்று தொடங்கியது. நவம்பர் 9-ந்தேதி (வியாழக்கிழமை) செல்வதற்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

10 நிமிடத்தில்...

ஆன்லைன் மற்றும் ரெயில் நிலைய கவுண்ட்டர்களில் முன்பதிவு செய்ய ஏராளமானோர் ஆர்வமுடன் காத்திருந்தனர். இந்த நிலையில், முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களிலேயே பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன.

குறிப்பாக சென்னையில் இருந்து மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் படுக்கை வசதி டிக்கெட்டுகள், 2-ம், 3-ம் குளிர்சாதன பெட்டிகளின் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

சென்னை, எழும்பூரில் இருந்து காலையில் புறப்பட்டு மதுரை, நெல்லை, கன்னியாகுமரி வழியாக செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மட்டுமே டிக்கெட்டுகள் உள்ளன.

கூடுதல் ரெயில்கள்

இதேபோல் பகல் நேரத்தில் கோவை புறப்படக்கூடிய ரெயில்களில் நவம்பர் 9-ம் தேதி பயணிப்பதற்கான டிக்கெட்டுகள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல நவம்பர் 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது.

நாளை (வெள்ளிக்கிழமை) முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 11-ந்தேதியும், நாளை மறுநாள் (15-ந்தேதி) முன்பதிவு செய்தால் நவம்பர் 12-ந்தேதியும் பயணிக்க முடியும்.

கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கு மாலை மற்றும் இரவு நேரங்களில் சென்னையில் இருந்து கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments