வடகிழக்குப் பருவமழை ஜன.19-ம் தேதிக்குப் பின் முடிய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு 3 மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:

“தமிழக கடலோரப் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.

ஜனவரி 16 அன்று தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜனவரி 17 அன்று தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

ஜனவரி 18 மற்றும் ஜனவரி 19 அன்று தமிழகம் மற்றும் புதுவையின் காரைக்கால் பகுதியில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காலை நேரங்களில் லேசான பனி மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான நேரங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக நாகப்பட்டினம் ஈச்சன்விடுதி (தஞ்சாவூர்) தலா 9 செ.மீ., ராமநாதபுரம் 8 செ.மீ., திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) பாபநாசம் (திருநெல்வேலி) மண்டபம் (ராமநாதபுரம்) தலா 7 செ.மீ., மதுக்கூர் (தஞ்சாவூர்) மணிமுத்தாறு (திருநெல்வேலி) ராமேஸ்வரம், தலைஞாயிறு (நாகப்பட்டினம்) தலா 6 செ.மீ., காயல்பட்டினம் (தூத்துக்குடி) 5 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை.

குறிப்பு: வடகிழக்குப் பருவமழை அல்லது தென் மாநிலங்களில் இருந்து வருகின்ற 19-ம் தேதி விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments