புதுக்கோட்டை அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர்கால கல்வெட்டு கண்டெடுப்பு!



புதுக்கோட்டை அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதும், சோழர் காலத்திலுமான பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா சத்தியமங்கலம் அருகேயுள்ள மேலூர் பாசன கண்மாயில் குமிழிக்காலில் எழுத்துப் பொறிப்பு இருந்துள்ளது. இது தொடர்பாக கீரனூர் சேர்ந்த வேளாண் பொறியாளர் நாராயணமூர்த்தி கொடுத்த தகவலையடுத்து, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனரும், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் தொல்லறிவியல் துறை ஆய்வாளருமான மணிகண்டன், கல்வெட்டை கண்டெடுத்து படியெடுத்து வாசித்துள்ளார்.

இதில் தட்டான் திறமன் என்பவர் நீர்ப்பாசனக்கண்மாய்க்கு பெருமடைக்கால் அமைத்துக்கொடுத்த தகவல் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் இக்கல்வெட்டு ஆயிரமாண்டுகளுக்கு முற்பட்டது எனவும் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- தமிழகத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாசனக்குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் உள்ளன. அவற்றில் சுமார் 250 குமிழிக்கல்வெட்டுகளே இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு மாவட்டங்களில் நீர்ப்பாசன அமைப்புகள் பற்றிய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அதிகமான குமிழிக்கல்வெட்டுகள் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி பகுதிகளைச் சேர்ந்தவையாக உள்ளன. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 42 கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இத்தகைய கல்வெட்டுகள் பழங்கால பாசனமுறையில் தமிழர்கள் கொண்டிருந்த நீர்ப்பாசன மேலாண்மை நுட்பத்தையும், நீர்ப்பங்கீட்டில் பின்பற்றப்பட்ட சமூக நடைமுறைகளை வெளிப்படுத்துபவையாக உள்ளன. பழங்கால உலோக அறிவியலில் கோலோச்சிய கம்மாளர் இனத்தவருள் ஒரு பிரிவினரான பொற்கொல்லர்கள் கல்வெட்டுகளில் தட்டான் என்று அழைக்கப்படுகின்றனர். திருச்சி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள குண்டூர் பெருங்குளத்தில் முதலாம் ஆதித்த சோழன் 7-ம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் குண்டூர் பெருந்தட்டான் மாறன் குவாவன் என்பவர் குமிழி அமைத்துக் கொடுத்த தகவல் பொறிக்கப்பட்டுள்ளது.

தட்டான் என அழைக்கப்படுவோர் சோழர் காலத்தில் பொன்னிலும், வெள்ளியிலும் மணிகளை இழைத்து உருவாக்கிய நுண்கலைஞர்கள் ஆவர். மன்னர் குடும்பத்திற்கான தட்டார்கள் பெருந்தட்டான் என அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் தட்டார்களுக்கென தட்டிறை, தட்டோலை, தட்டார் பாட்டம் உள்ளிட்ட வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. உருக்குலைகளுக்கு வரி விதிப்பு செய்த தகவலை புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அரங்குளநாதர் கோவில் கல்வெட்டு தெரிவிக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் மேலூர் மேலி(ழி)க்கண்மாயின் பெரிய குழுமிக்கருப்பர் கொம்படி ஆலயத்தின் அருகேயுள்ள குமிழிக்கால் கல்வெட்டில், சிறு வாயில் நாட்டு மேலூர் தட்டான் திறமன் என்பவர் இறைவனின் எண்ணப்படி பெருமடைக்கால் நட்டுவித்தாக செய்தி பொறிக்கப்பட்டுள்ளது. இப்புதிய கல்வெட்டு பராந்தகன் காலத்தைய எழுத்தமைதியோடு காணப்படுவதால் 10-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக கணிக்கலாம்.

பயிர்த்தொழிலையும் அதற்கு தேவையான பாசன ஏற்பாடுகளையும் இறைத்தொண்டாக நினைத்து செயற்படுத்தியதை இக்கல்வெட்டின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. தமிழகத்தில் சோழ, பாண்டியர், வணிக குழுக்கள், உள்ளூர் நிர்வாக அமைப்புகள், உள்ளிட்டோருடன் பொதுப்பணியில் நாட்டமுடைய செல்வந்தர்களும், நீர்நிலைகளை பாதுகாப்பதிலும் புதிய குளங்களை அமைப்பதிலும் பாசன கட்டமைப்புகளை ஏற்படுத்துவதிலும் சீரமைப்பதிலும் பெரும்பங்காற்றி இருக்கின்றனர் என்பதற்கான சான்றாக இக்கல்வெட்டு திகழும். இவ்வாறு அவர் கூறினார்.

இக்கல்வெட்டு வாசிப்பை மூத்த கல்வெட்டறிஞர் ராஜகோபால் உறுதி செய்துள்ளார். கல்வெட்டை படியெடுக்கும் போது முருக பிரசாத், ராகுல் பிரசாத், தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் உறுப்பினர் பீர்முகமது ஆகியோர் உடன் இருந்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

1 Comments

  1. மாறன் குவாவன் என்பவர் முத்தரையர் சமூகம்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.