கோடியக்கரை பகுதியில் கடலில் குளித்த காரைக்குடி பகுதியை சேர்ந்த மாணவரின் கதி என்ன? மற்றொருவர் மீட்கப்பட்டார்




மணமேல்குடி கோடியக்கரை பகுதியில் கடலில் குளித்த மாணவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மற்றொருவர் மீட்கப்பட்டார்.

விடுமுறையை கொண்டாட...

மணமேல்குடி அடுத்த கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் முகமது யூசுப். இவரது மகன் முகமது பைசல் கான் (வயது 19). இவரது நண்பர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஜியாவுதீன் மகன் முசாமைதீன் (17), காரைக்குடி பகுதியை சேர்ந்த பைசல் ரகுமான் மகன் தஸ்லீம் (17), ஹரீஷ் (17). இவர்கள் 4 பேரும் காரைக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். பொங்கல் விடுமுறை கொண்டாடவும், கடற்கரை பகுதியை சுற்றி பார்க்கவும், ஹரீஷ் உள்பட 3 பேரும் முகமது பைசல் கான் வீட்டிற்கு நேற்று முன்தினம் வந்துள்ளனர்.

மாணவரின் கதி என்ன?

இந்நிலையில், நேற்று மாலை மணமேல்குடியில் உள்ள கோடியக்கரை பகுதிக்கு அவர்கள் வந்துள்ளனர். அங்குள்ள பூங்கா, காட்சி கோபுரத்தை சுற்றி பார்த்துவிட்டு கடலில் குளித்துள்ளனர். 4 பேரும் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது ஹரீஷ் மற்றும் தஸ்லீம் ஆகிய 2 பேரும் கடல் நீர் உள் நீரோட்டம் உள்ள பகுதியில் குளித்துள்ளனர்.

அப்போது திடீரென தஸ்லீமையும், ஹரீசையும் கடல் நீர் உள்ளோட்டத்தில் தண்ணீர் இழுத்துள்ளது. இதில் 2 பேரும் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டனர். இதைப்பார்த்த அருகில் இருந்த நண்பர்கள் 2 பேரும் ஹரீசை மற்றும் காப்பாற்றினர். ஆனால் தஸ்லீமை கடல்நீர் உள்ளே இழுத்து சென்றது. இதையடுத்து உடனே ஹரீசை ஆட்டோ மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தேடும் பணி

இதைப்பார்த்த சுற்றுலா பயணிகள் இதுகுறித்து ஜெகதாப்பட்டினம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தீயணைப்புதுறையினர் மற்றும் மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார், மீனவர்கள் துணையுடன் தஸ்லீமை படகின் மூலம் கடலில் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரவு நேரம் ஆகிவிட்டதாலும், கடல் நீர் உள்ளோட்டம் அதிகமாக இருந்ததால் தேடும் பணியை முடித்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தேடும் பணி தொடரும் என கூறப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மாணவரின் உறவினர்கள், பொதுமக்கள் கடற்கரை பகுதியில் குவிந்தனர்.

அறிவிப்பு பலகை

இதுகுறித்து மணமேல்குடி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தினசரி திதி கொடுக்க நூற்றுக்கணக்கான மக்களும் விழா காலங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் வந்து செல்கின்றனர். அப்படி வந்து செல்லும் இந்த கோடியக்கரை சுற்றுலா பகுதியில் எங்கு குளிக்கணும் எங்கு குளிக்க கூடாது என்று கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அபாய அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். கடல் வெள்ளப்பெருக்கு, கடல் நீர் உள்ளோட்டம் நேரங்களில் இது மாதிரி அபயகரமான நிகழ்வுகள் ஏற்படுகிறது. தினசரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments