ஆன்லைனில் விண்ணப்ப பதிவு ஆரம்பம்: என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 2-ந் தேதி தொடங்கும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு




என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கிய நிலையில், கலந்தாய்வு வருகிற ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி தொடங்க இருப்பதாக, கலந்தாய்வை நடத்தும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்து உள்ளது.

என்ஜினீயரிங் படிப்பு விண்ணப்ப பதிவு

2023-24-ம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். போன்ற என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. இதனை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தொடங்கிவைத்தார்.

விருப்பமுள்ளவர்கள் www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூன்) 4-ந் தேதி ஆகும்.

விண்ணப்ப பதிவு தொடங்கிவிட்ட நிலையில், கலந்தாய்வு எப்போது தொடங்கும்? என்பது குறித்த தகவலை கலந்தாய்வை நடத்தும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி, விண்ணப்ப பதிவு செய்தவர்களுக்கான ரேண்டம் எண் அடுத்த மாதம் 7-ந் தேதி வெளியிடப்பட்டு, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு ஆன்லைன் வாயிலாக அடுத்த மாதம் 12-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடத்தப்பட இருக்கிறது.

கலந்தாய்வு தொடங்குவது எப்போது?

அதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் 12-ந் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது. தரவரிசை பட்டியலில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை சரிசெய்து கொள்வதற்கு ஜூலை மாதம் 13-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட உள்ளது.

இதையடுத்து ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள், விளையாட்டு மாணவர்கள் ஆகிய சிறப்பு பிரிவினர்களுக்கு கலந்தாய்வும், ஆகஸ்டு 7-ந் தேதி முதல் செப்டம்பர் 24-ந் தேதி வரை 4 சுற்றுகளாக பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் தொடங்கி நடைபெற இருக்கிறது.

அக்டோபர் 3-ந் தேதி...

இந்த கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்களை நிரப்புவதற்கு செப்டம்பர் 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை துணை கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. அதன் பின்னர், எஸ்.சிஏ. பிரிவில் இருந்து இடங்கள் எஸ்.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டு, அவர்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை நடக்க இருக்கிறது. மொத்தத்தில் அக்டோபர் 3-ந் தேதிக்குள் என்ஜினீயரிங் கலந்தாய்வை நடத்தி முடிக்க தொழில்நுட்ப கல்வி இயக்ககம் திட்டமிட்டு இருக்கிறது. கடந்த கல்வியாண்டில் (2022-23) நவம்பர் மாதம் 26-ந் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

என்ஜினீயரிங் படிப்பை தேர்வு செய்து, பின்னர் வேறு படிப்புக்கு சென்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு (2022-23) குறைந்திருப்பதாக அமைச்சர் க.பொன்முடி கூறினார். அதற்கு முந்தைய ஆண்டில் (2021-22) 14 ஆயிரத்து 183 இடங்கள் அவ்வாறு காலியாக இருந்த நிலையில், கடந்த ஆண்டில் 7 ஆயிரத்து 545 ஆக குறைக்கப்பட்டது என்றும், வரும் ஆண்டில் இதை மேலும் குறைக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

எவ்வளவு இடங்கள்?

கடந்த ஆண்டில் 446 என்ஜினீயரிங் கல்லூரிகளில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 289 இடங்கள் நிரப்பப்பட்டன. இந்த ஆண்டு கல்லூரிகள் இணைப்பு அங்கீகாரம் மற்றும் புதிய கல்லூரிகள் தொடங்குவதற்கான அனுமதி பெறுவதற்கு ஜூன் மாதம் இறுதி வரை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுமதி வழங்கியிருக்கிறது. எனவே இந்த ஆண்டு எவ்வளவு கல்லூரிகள் கலந்தாய்வில் பங்கேற்கும்? அந்த கல்லூரிகளில் எவ்வளவு இடங்கள் வரும்? என்ற விவரம் அதன்பிறகுதான் தெரியவரும். விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாளில் சுமார் 8 ஆயிரம் பேர் விண்ணப்ப பதிவு செய்திருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments