‘மோக்கா' புயல் காரணமாக தமிழகத்தில் 4 நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் வானிலை மையம் தகவல்




‘மோக்கா' புயல் காரணமாக தமிழகத்தில் 4 நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

‘மோக்கா’ புயல்

தமிழகத்தில் ‘அக்னி நட்சத்திரம்’ என்று அழைக்கப்படும் ‘கத்திரி வெயில்' காலம் தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே கொளுத்தி எடுக்கும் வெயிலின் நடுவே கத்திரி வெயிலின் கொடூரம் எப்படி இருக்குமோ... என்று பயந்த மக்களுக்கு, கோடை மழை கொஞ்சம் ஆறுதலை ஏற்படுத்தி வருகிறது.

அந்த கோடை மழையும் குறைந்து வரும் நிலையில், வங்கக்கடலில் உருவான தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நேற்று புயலாகவும் உருவானது. இதற்கு ‘மோக்கா' என்று பெயரிடப்பட்டு உள்ளது.

இது இன்று (வியாழக்கிழமை) தீவிர புயலாகவும், அதன்பின்னர் அதிதீவிர புயலாகவும் வலுவடையக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பை விட இனி வரக்கூடிய நாட்களில் வெப்பத்தின் தாக்கம் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பத்தை கொண்டு வரும் புயல்

எப்போதுமே புயல் என்றாலே மழை அடிக்கும், இடி இடிக்கும் என்றுதான் மக்கள் எண்ண ஓட்டம் இருக்கும். ஆனால் இந்த புயல் அதற்கெல்லாம் வேட்டு வைப்பது போல வருகிறது.

தற்போது உருவாக உள்ள புயலானது மத்திய வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர வாய்ப்பு இருக்கும் என்பதால் தமிழக நிலப்பரப்பில் இருக்கும் காற்றானது கடல்பரப்புக்கு செல்லும் என்பதால், தமிழகத்தில் வெயிலின் தாக்கமும், தரைக்காற்றின் வெப்பநிலையும் அதிகரிக்கும் என வானிலை ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதாவது இன்று முதல் வருகிற 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரையிலான 4 நாட்கள் தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 4 டிகிரி வரை உயரக்கூடும் என்றும், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம் என்றும் ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இருப்பினும் ஓரிரு இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த 4 நாட்கள் அந்தமான் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தாலும், காற்றின் வேகம் படிப்படியாக குறையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments