ராமநாதபுரம் பலத்த சத்தத்துடன் வெடித்த ராட்சத பலூன்; தூக்கி வீசப்பட்ட தொழிலாளர்கள் - நடந்தது என்ன?!




பாம்பன் அருகே விசைப்படகை கடலில் இறக்கும், ராட்சத பலூன் வெடித்து சிதறியதில் படகு பழுது நீக்கும் தொழிலாளர்கள் இருவர் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழிலே பிரதானமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக மண்டபம் மற்றும் பாம்பன் பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் விசைப்படகுகளை பழுது நீக்கும் தொழிற்சாலை அமைத்து மீனவர்களின் பழுதடைந்த படகுகளை சீர் செய்து கொடுத்து வருகின்றன. இதற்காக விசைப்படகுகளை கடலிலிருந்து கரைக்கும், கரையிலிருந்து கடலுக்கும் ஏற்றி, இறக்குவதற்கு ராட்சத பலூன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய நிலையில் விசைப்படகு உரிமையாளர் தங்கள் படகுகளை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். மீன்பிடி தடைக்காலம் கடந்த 14-ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் சீர் செய்யப்பட்ட படகுகள் ஒவ்வொன்றாக கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றன. அதன்படி பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் உள்ள படகு பழுதுபார்க்கும் தொழிற்சாலையில் பழுது நீக்கப்பட்ட விசைப்படகை மீண்டும் கடலில் இறக்குவதற்காக ராட்சத பலூன்களுக்கு எந்திரம் மூலம் காற்று நிரப்பியுள்ளனர்.


அப்போது பலூனில் காற்றின் அழுத்தம் அதிகமாகி அதிக சத்தத்துடன் வெடித்துள்ளது. அதில் பலூனை பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் ஜெயில் தெருவை சேர்ந்த நேவிஸ், முந்தல் முனையை சேர்ந்த சண்முகநாதன் இருவரும் பல மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர். இதில் இருவருக்கும் நெஞ்சு மற்றும் கைகளில் எழும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தனர். அவர்களை அங்கிருந்த மீனவர்களும், தொழிலாளர்களும் மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பலூன் வெடித்த சத்தம் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்டு வெடிகுண்டுதான் வெடித்துள்ளது என எண்ணி தெற்குவாடி கடற்கரைக்கு ஏராளமான மீனவர்கள் படையெடுத்தனர்.


ராட்சத பலூன்கள் மூலம் கடலில் இறக்கப்படும் படகு
தகவல் அறிந்து பாம்பன் போலீஸாரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பின்னர் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று படுகாயம் அடைந்த இருவரையும் நேரில் சந்தித்து நடந்த சம்பவம் தொடர்பாக விசாரித்தனர். இதையடுத்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விசைப்படகுகளை கடலில் இறக்கும் ராட்சத பலூன் வெடித்து தொழிலாளர்கள் இருவர் படுகாயம் அடைந்த சம்பவம் பாம்பன் மற்றும் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments