காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்ற கோபாலப்பட்டிணம் நைனா முகமது ஜனாஸா நல்லடக்கம்



கோபாலப்பட்டிணத்தில் கொலையுண்ட நைனா முகமது உடல் கோபாலப்பட்டிணம் மையவாடியில் காவல்துறை பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த கொலையுண்ட நைனா முகமது உடல் ஆறு நாட்களுக்கு பிறகு இன்று மதியம் 3.30 மணியளவில் காவல்துறை பாதுகாப்புடன் கோபாலப்பட்டிணம் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது. 
மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் பகுதியை சேர்ந்தவர் நைனா முகமது (வயது 42). இவர் மீமிசல் பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வந்தார். கடந்த 22-ந் தேதி வழக்கம்போல் கடைக்கு சென்ற அவர், இரவில் வீட்டிற்கு செல்லும் வழியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்நிலையில் அவ்வழியே சென்றவர் ஆம்புலன்ஸ்க்கு தொடர்பு கொண்டு நைனா முகமது அடிபட்டு கிடப்பதாக தகவல் தெரிவித்தனர்.
அப்போது அவர் கோபாலப்பட்டிணம் முக்கிய சாலையில் தலையில் காயத்துடன் கிடந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை மீமிசல் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ஆனால் நைனா முகமது அடித்துக் கொலை செய்யப்பட்டதாகவும், எனவே இது குறித்து கொலை வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும், அவரது மனைவி ரம்ஜானியா மீமிசல் போலீசில் புகார் அளித்தார். மேலும் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, அவரது உறவினர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

அத்துடன் நைனா முகமதுவின் உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும், அவரது குடும்பத்தின் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 25-ந் தேதி நைனா முகமதுவின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதனை வீடியோ பதிவும் செய்யப்பட்டது.

இருப்பினும் குற்றவாளிகளை கைது செய்யும் வரை நைனா முகமதுவின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி, அவரது உடலை பெற உறவினர்கள் மறுத்துவிட்டனர். இதற்கிடையே இந்த வழக்கு சம்பந்தமாக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் மற்றும் மீமிசல் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தநிலையில் கடந்த மூன்று நாட்களாக அடுத்தடுத்து குற்றவாளிகளை காவல்துறை கைது செய்தது.
இதனையடுத்து நைனா முகமதுவின் உறவினர்கள் உடலை வாங்கி அடக்கம் செய்ய சம்மதம் தெரிவித்ததையடுத்து இன்று காலை புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று சுமார் மதியம் 3.00 மணியளவில் அவரது சொந்த வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு சில நிமிடங்கள் உறவினர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு பிறகு பள்ளிவாசலுக்கு எடுத்து செல்லப்பட்டு தொழுகை நடத்தப்பட்டு கோபாலப்பட்டிணம் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த அடக்க நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments