விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான தேர்வு போட்டிகள்: மாணவ-மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!



விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான தேர்வு போட்டிகளுக்கு மாணவ-மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், பள்ளி மாணவ-மாணவிகள் விளையாட்டு துறையில் சாதனைகளை புரிவதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. 2024-ம் ஆண்டிற்கான பள்ளி மாணவ-மாணவிகள் 7, 8, 9 மற்றும் பிளஸ்-1 வகுப்புகளில் சேருவதற்கான மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.

அதன்படி வருகிற 10-ந் தேதி மாணவர்களுக்கும், 11-ந் தேதி மாணவிகளுக்கும் காலை 6.30 மணிக்கு தேர்வு போட்டிகள் நடைபெறுகிறது. விளையாட்டு விடுதியில் மாணவ-மாணவிகள் சேருவதற்கு வருகிற 8-ந் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலம் www.sdat.tn.gov.in மற்றும் tntalent.sdat.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

பள்ளி மாணவர்களுக்கான தேர்வு போட்டிகள் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, ஆக்கி, கபடி, கையுந்துபந்து, கிரிக்கெட் மற்றும் நீச்சல் ஆகிய விளையாட்டுகளுக்கும், பள்ளி மாணவிகளுக்கான தேர்வு போட்டிகள் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, ஆக்கி, கபடி மற்றும் கையுந்துபந்து ஆகிய விளையாட்டுகளுக்கும் நடத்தப்படும்.

மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டவர்கள் மாநில அளவிலான தேர்வு போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். சிறப்புநிலை விளையாட்டு விடுதியில், முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் சேர்க்கைக்கான மாநில அளவிலான தேர்வு போட்டிகள் சென்னையில் நடக்கிறது. இதில், மாணவ- மாணவிகள் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப படிவம் மற்றும் அனைத்து கூடுதல் விவரங்கள் www.sdat.tn.gov.in மற்றும் tntalent.sdat.in என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்புநிலை விளையாட்டு விடுதிக்கான விண்ணப்பிக்க கடைசிநாள் வருகிற 5-ந் தேதி மாலை 5 மணி வரையும், முதன்மை நிலை விளையாட்டு மையத்திற்கான விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 6-ந் தேதி மாலை 5 மணி வரையும், விளையாட்டு விடுதிக்கு விண்ணப்பிக்க வருகிற 8-ந் தேதி மாலை 5 மணி வரை ஆகும். மேலும் தகவல் பெற ஆடுகள தகவல் தொடர்பு மையத்தை 9514000777 செல்போன் எண்ணிலும், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703498 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட விளையாட்டு அரங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments