பள்ளித் தாளாளர் வீட்டில் தங்க நகைகள், பணம் கொள்ளை : டி.வி.ஆரையும் எடுத்துச் சென்ற திருடர்கள்!






புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி மீமிசல் அருகே உள்ள குமரப்பன்வயல் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி(64). அப்பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறார். இவரும் இவரது மனைவி சரளாதேவியும் கடந்த 20 ந் தேதி அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்றுள்ளனர். வீட்டில் இருந்த அவரது மகன் நிரஞ்சன் 27 ந் தேதி அரியலூரில் உள்ள அவரது மனைவி ஊருக்குச் சென்றுவிட்டதால் அவர்களது உறவினர் பிரபுவிடம் (36) வீட்டைப் பார்த்துக் கொள்ளக் கூறியுள்ளனர். 

அதன்படி 28 ந் தேதி மாலை வீட்டிற்கு வந்து பார்த்துவிட்டுச் சென்ற பிரபு  29 ந் தேதி அன்று காலை வந்து பார்த்த போது ராமசாமி வீட்டின் கதவுகளில் உள்ள பூட்டுகள் உடைக்கப்பட்டுக் கிடந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் சிதறிக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பிரபு வெளியூர் சென்றிருந்த வீட்டின் உரிமையாளர்களான தனது உறவினர்களிடம் தகவல் கூறியுள்ளார்.

தகவல் கேட்டு அதிர்ச்சியடைந்த ராமசாமி மகன் நிரஞ்சன் மீமிசல் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலையடுத்து மீமிசல் போலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை செய்த போது வீட்டின் கதவிற்கு மேல் உள்ள ஜன்னல் கண்ணாடியை உடைத்து அதன் வழியாகக் கதவின் தாழ்ப்பாளை விளக்கி கதவைத் திறந்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோ, அலமாரியில் இருந்த பொருட்களை அள்ளி கீழே வீசிவிட்டு அங்கு வைத்திருந்த தங்கச் சங்கிலிகள், மோதிரங்கள், ஆரம், கைச் ஜெயின்கள், வளையல்கள் என சுமார் 50 பவுன் தங்க நகைகள், மற்றும் சுமார் ரூ.25 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றைத் திருடிய மர்ம நபர்கள் வீட்டைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைச் சேமிக்கும் டிவிஆர் போன்றவற்றையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது. 



இதனையடுத்து தடய அறிவியல் சோதனைகள் செய்யப்பட்டு சில சந்தேக நபர்களைப் பிடித்து கோட்டைப்பட்டினம் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். தனியார்ப் பள்ளி தாளாளர் குடும்பத்தினர் வெளியூர் சென்ற நேரத்தில் தங்க நகைகள், பணம் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பது அச்சமாக உள்ளது என்கின்றனர் பொதுமக்கள்.
 


எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments