6 மாதங்களாக பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகளை நாளை (வியாழக்கிழமை) முதல் முடக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளது. அதனால் நாடு முழுவதும் 1 கோடியே 58 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்படும்.
நடவடிக்கை
நாடு முழுவதும் ஏழை மற்றும் தகுதியான குடும்பங்களுக்கு மத்திய அரசு வழங்கும் இலவச உணவு தானியங்கள், மாநில அரசுகளின் பொது வினியோகத் திட்டம் மூலம் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்தில் தகுதியானவர்களுக்கு தொடர்ந்து பயன் கிடைப்பதை உறுதி செய்ய ரேஷன் கார்டுகள் மற்றும் பயனாளிகளின் விவரங்கள் அவ்வப்போது சரிபார்க்கப்படுகின்றன. ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர் ஒருவர் இறந்தபிறகும் அவரது பெயர் நீடிப்பது, குடும்பம் வேறு இடத்துக்கு குடிபெயர்ந்த பிறகும் பழைய பதிவு தொடர்வது, ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டுகளில் இடம்பெறுவது போன்ற காரணங்களால் தரவுகளில் தவறுகள் ஏற்படலாம்.
இதுபோன்ற பதிவுகளை கண்டறிந்து நீக்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
நாடு முழுவதும் சுமார் 20.4 கோடி ரேஷன் கார்டுகள் மூலம் 80.6 கோடி பேர் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். இந்தநிலையில், கடந்த 6 மாதங்களாக ரேஷன் பொருட்களை பெறாத ரேஷன் கார்டுகளுடன் தொடர்புடைய 1.58 கோடி பயனாளிகளின் சலுகைகளை அக்டோபர் 1-ந் தேதி (அதாவது நாளை) முதல் தற்காலிகமாக முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சம்பந்தப்பட்ட ரேஷன் கார்டுகள் முதலில் தற்காலிகமாக முடக்கப்படும். அவர்களின் பெயர்கள் உடனடியாக தரவுத்தளத்தில் இருந்து நீக்கப்படாது.
3 மாதம் அவகாசம்
சம்பந்தப்பட்டவர்கள் தங்களது தகுதியை உறுதி செய்ய 3 மாத கால அவகாசம் வழங்கப்படும். இந்த காலத்துக்குள் இ-கே.ஒய்.சி. நடைமுறையை முடிக்க வேண்டும். தேவையான இடங்களில் கள ஆய்வும் நடத்தப்படும். தகுதி உறுதி செய்யப்பட்டால், ரேஷன் கார்டு மீண்டும் செயல்படுத்தப்பட்டு உணவு தானியங்கள் தொடர்ந்து வழங்கப்படும்.
எனவே, இத்தகைய கார்டுகளை உடனடியாக நிரந்தரமாக ரத்து செய்யாமல், முதலில் தற்காலிகமாக முடக்கி, தகுதியை உறுதி செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதன்மூலம் உண்மையான பயனாளிகளுக்கு உணவு தானியங்கள் சென்றடைவதுடன், வீணாக்கம் மற்றும் முறைகேடுகளையும் குறைக்க முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.
5.8 கோடி கார்டுகள் நீக்கம்
ரேஷன் கார்டு தரவுகளை கணினிமயமாக்குதல், ஆதார் இணைப்பு, இ-கே.ஒய்.சி. உள்ளிட்ட பணிகளும் நடந்து வருகின்றன. கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், தரவு சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளின் மூலம் சுமார் 5.8 கோடி ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டதாக மத்திய உணவுத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 30-ந்தேதி நிலவரப்படி, ரேஷன் கார்டுகளுக்கான இ-கே.ஒய்.சி. பணிகள் 90.64 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாக மத்திய உணவுத்துறை தெரிவித்துள்ளது. நாளை முதல் 1.58 கோடி பயனாளிகளின் ரேஷன் சலுகைகள் தற்காலிகமாக முடக்கப்படும். ஆனால் எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கார்டுகள் முடக்கப்படும் என்பதனை மத்திய அரசு தெரிவிக்கவில்லை.
அதனால் தமிழகத்தில் 3 மாதங்களுக்குள் ‘இ-கே.ஒய்.சி.’ மற்றும் தேவையான கள ஆய்வு மூலம் தகுதி உறுதி செய்யப்பட்டால், அவர்களின் ரேஷன் கார்டுகள் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.