பெருகிவரும் கள்ளக்காதல்களும் அருகிவரும் கற்புநெறியும்!இப்போதெல்லாம் செய்தித்தாள்களை புரட்டினால், கள்ளக்காதல் சம்பந்தமான செய்தி இடம்பெறாத நாட்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு தினம்தோறும் அத்தகைய செய்திகளை பார்க்கிறோம். காதலுக்கு கண் இல்லை என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த கள்ளக்காதலுக்கு இதயமும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
கள்ளக்காதலனுடன் சேர்ந்துகொண்டு கட்டிய கணவனைகொன்ற மனைவி கைது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தைகளை கொன்ற தாய் கைது. கள்ளக்காதல் விஷயம் மனைவிக்கு தெரிந்து விட்டதால் மனைவியை கொலைசெய்துவிட்டு ஸ்டவ் வெடித்து இறந்ததாக நாடகமாடிய கணவன் கைது.

இப்படி பல்வேறு பரிமாணங்களில் கள்ளக்காதல் சந்திசிரிக்கிறது. இந்த கள்ளக்காதல் இந்த அளவிற்கு வளர்ந்ததற்கு முழு முதல் காரணம் சினிமாவாகும்.

தம்பிமனைவியை அடைவது எப்படி, அண்ணியை கவர்வது எப்படி, அக்கா கணவரை மச்சினி மயக்குவது எப்படி, கொழுந்தனை அண்ணி எப்படி வளைத்து போடலாம், அண்ணன் மகனை அத்தை வளைப்பது எப்படி, பள்ளிக்கூட டீச்சரை எப்படி காதலிப்பது, வாத்தியாரை மாணவி எப்படி காதலிப்பது, என்று இன்னும் கள்ளக்காதலில் எத்தனை வகைகள் உண்டோ அத்தனை விசயத்திற்கும் சினிமா தெளிவாக பாடம் நடத்தியது. இதுபோக நம்முடைய சமூக அமைப்பு, அதாவது ''அண்ணன் பொண்டாட்டி அரை  பொண்டாட்டி, தம்பி பொண்டாட்டி தாம் பொண்டாட்டி'' என்று அந்த காலத்திலேயே பழமொழி சொல்லப்போக, அதை தவறாக விளங்கிய தவறானவர்கள் அண்ணைக்கு  அடுத்து இன்னொரு அண்ணையாக  மதிக்க வேண்டிய அண்ணியை வேறு பார்வை பார்க்கிறது. தன் மகளைப்போல் நினைக்க வேண்டிய மச்சினியை 'மயக்கப்' பார்வை பார்க்கிறார்கள்.

மச்சான்,கொழுந்தன்,அண்ணி,மச்சினிச்சி,என்று கேலி பேச்சும் கும்மாளமும் சிலரை சிலநேரங்களில் வழிதவற செய்கிறது. மேலும், கணவன் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி கண்ணியமாக வாழ்வதை விடுத்து சோசலிசம் என்றபெயரால் 'நானும் சம்பாதிப்பேன்'என்று செல்லும் பெண்களில் சிலர் தம்மோடு பணியற்றும் ஊழியர்கள்,அதிகாரிகளில் தவறானவர்கள் விரிக்கும் வலையில் விழுந்து தானும் கெட்டு தனது குடும்பத்தையும் நடுத்தெருவுக்கு கொண்டுவருகின்றனர். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படும் பெண்களில் சிலர் அதை அடையும் நோக்கில் வசதிபடைத்த சிலரின் கள்ளக்காதல் வலையில் விழுகின்றனர். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இவ்வாறான பெருகி வரும் கள்ளக்காதலுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற சில சாக்கடைகள் முயல்வதை சமீபத்திய செய்தி
நமக்கு சொல்கிறது.

மும்பையைச் சேர்ந்தவர் தீபர் மிர்வானி. திருமணமான இவர் இன்னொருவரின்
மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இது தொடர்பாக அவர் மீது இந்திய தண்டளை சட்டத்தின் 497வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து கிடைக்க வாய்ப்பு உள்ளது.
எனவே, இந்த சட்டப்பிரிவை எதிர்த்து அவர் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ''இந்த சட்டப்பிரிவு இன்றைய சமூக சூழலுக்கு உகந்ததாக இல்லை என்றும், இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைக்கு எதிரானது என்றும், தன் மீதான கீழ்க்கோர்ட்டு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். மேலும், ''தனக்கு விருப்பப்பட்ட ஆணுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளும் உரிமை பெண்ணுக்கு உள்ளது. சம்பிரதாய நடைமுறைகளை காரணம் காட்டி அதற்கு தடை விதிக்க முடியாது. தனது வாழ்க்கை துணை தகுதியற்ற நிலையில் இருக்கும்போதுதான் கணவனோ அல்லது மனைவியோ கள்ளக்காதலில் ஈடுபடுகிறார்கள். மனைவி இன்னொரு ஆணுடன் கள்ளக்காதலில் ஈடுபடும் நிலையில், இந்திய தண்டனை சட்டத்தின் 497வது பிரிவானது கணவனுக்கு பாகுபாடு காட்டுவதாக உள்ளது என்ற கருத்தையும் தனது வக்கீல் மூலமாக நீதிமன்றத்தில் வைத்துள்ளார்.

பின்னர் இதுபற்றி கருத்துக் கூறிய நீதிபதி பி.எச்.மார்லபல்லே, ''திருமணம் ஆன ஆணோ அல்லது பெண்ணோ கள்ளக்காதலில் ஈடுபடுவதை அனுமதித்தால் நாகரிக சமுதாயமே இல்லாமல் போய்விடும். இந்த சட்டப்பிரிவுக்கு விடக்கூடிய சவாலை ஏற்றுக்கொண்டால் அது திருமண பந்தத்துக்கு எதிராக அமைந்துவிடும். முறைகேடான செக்ஸ் உறவு குற்றத்துக்காக பெண்களையும் இந்திய தண்டனை சட்ட வரம்பின் கீழ் கொண்டு வரும் வகையில் அந்த சட்டப்பிரிவில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. வயதுக்கு வந்த ஒரு பெண்ணும், ஆணும் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள விரும்பினால் அவர்கள் தாராளமாக வைத்துக்கொள்ளலாம். ஆனால் அவர்கள் அதை திருமண பந்தத்துக்கு வெளியே இருந்து செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நீதிபதியின் கருத்தில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில், கள்ளக்காதல் என்பது நாகரீக சமுதாயத்திற்கு எதிரானது என்ற கருத்தை கூறியுள்ளார். இது வரவேற்கத்தக்கது. அதே போல் இந்திய தண்டனை சட்டம் 497வது பிரிவின் கீழ் பெண்களையும் தண்டிக்கும் வகையில் சட்டதிருத்தம் அவசியம் என்ற கருத்தைக் கூறியுள்ளார். இதுவும் வரவேற்க்கத்தக்கது. ஏனெனில் கள்ளக்காதல் விஷயத்தில் ஆண் மட்டுமே பாதிக்கப்படுகின்றான். கள்ளக் காதலில்  ஈடுபடும் பெண்கள் அதையொட்டி வேறு ஏதேனும் குற்றச்செயலில் ஈடுபடாதவரையில்  அவர்கள் இச்சட்டத்தினால் பாதிக்கப்படுவதில்லை. எனவே நீதிபதி கூறிய சட்டதிருத்தம் மிக மிக அவசியமே. அடுத்து நீதிபதி கூறிய கருத்து, கள்ளக்காதலை எந்த நாகரீகத்தின் கண்ணியத்திற்காக கூடாது  என்றாரோ அந்த நாகரீகத்தை குழி தோண்டி புதைப்பதாக உள்ளது. அது என்னவெனில், ''வயதுக்கு வந்த ஒரு பெண்ணும், ஆணும் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள விரும்பினால் அவர்கள் தாராளமாக வைத்துக்கொள்ளலாம். ஆனால் அவர்கள் அதை திருமண பந்தத்துக்கு வெளியே இருந்து செய்து கொள்ள வேண்டும்' என்பதுதான் அது.

திருமணத்திற்கு முன்பு ஒரு ஆணும்- பெண்ணும் விரும்பி உறவு வைத்துக்
கொள்ளலாம் என்ற கருத்து கலாச்சார சீரழிவை உண்டாக்காதா? முறை தவறிய உறவில் ஈடுபடும் ஒரு ஜோடியை கைது செய்யும் போது, 'நாங்கள் வயது வந்தவர்கள்- நாங்கள் விரும்பியே செய்கிறோம். இதற்கு சட்டத்திலும் எந்த தடையுமில்லை என்று கூறினால், அந்த ஜோடி மீது காவல்துறை கை வைக்க முடியுமா? எனவே திருமணத்தின் முன்பும் சரி-பின்பும் சரி முறையற்ற உறவை மேற்கொள்ளும் ஆணாகிலும் பெண்ணாகிலும் அவர்கள் தண்டிக்கப்படும் வகையில் ஒரு சீரிய சட்டம் உடனடியாக கொண்டுவர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

Post a Comment

0 Comments