சாதிவாரி கணக்கெடுப்பு முஸ்லிம்களின் கவனத்திற்கு ……!தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் சாதி வாரி கணக்கெடுப்பு பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு தொடர்பாக உசசநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சரியான நீதி கிடைக்க இந்த கணக்கெடுப்பு பெரிதும் உதவிடும்.
 
    எனவே ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் மிகவும் கவனத்துடன் இந்த கணக்கெடுப்பில் பங்கு கொள்ள வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு தொடர்பான, சமூக அளவிலான முக்கிய முடிவுகளின் போது இந்தப் புள்ளி விவரம் முக்கிய ஆவணமாகப் பயன்படும்.

   சில மாவட்டங்களில் கணக்கெடுப்பாளர்கள் பட்டியலில் உள்ள 24 கேள்விகளுக்கும் விடைகளை கேட்காமல் வெறும் பெயர் மற்றும் முகவரியை மட்டும் பதிந்து விட்டுச் செல்வதாக வரும் புகார் குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகம் மாநில அளவிலும் மத்திய அளவிலும் இடஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்க வேண்டும் என்று போராடி வரும் இச்சூழலில் இந்த சாதி வாரி கணக்கெடுப்பபை பெரும் கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் அணுக வேண்டும். 

   முஸ்லிம்களை பொறுத்த வரையில் 'மதம்'' என்ற கேள்விக்கு 'இஸ்லாம்''
என்று குறிப்பிடுவதே சரியானது. 'முஸ்லிம்' என்று பதிவு செய்ய அனுமதிக்கக கூடாது. இஸ்லாத்தில் சாதிய பிரிவுகள் இல்லையென்றாலும் முஸ்லிம்களின் பல்வேறு பிரிவினரின் சமூக நிலையை அடிப்படையாக கொண்டு தமிழகத்தில் லெப்பை, (தமிழ்-உருது பேசக்கூடிய ராவுத்தர், மரைக்காயர் உட்பட) தக்னி, தூதே குலா, மாப்பிள்ளா, அன்சர், ஷேக், சையத் என ஏழு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில், முதல் நான்கும் தேசிய அளவில் மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

       எனவே, தமிழகத்தில் கணக்கெடுப்பாளர்களிடம் சாதி என்ற கேள்விக்கு லெப்பை, தக்னி, தூதேகுலா, மாப்பிள்ளா ஆகிய நான்கில் ஒன்றை இடம் பெறச் செய்தால் மட்டுமே மத்திய-மாநில அரசுகளின் இட ஒதுக்கீட்டுச் சலுகையை பெற முடியும். ராவுத்தர், மரைக்காயர் உள்ளிட்டோர் 'லெப்பை' என்ற பிரிவின் கீழ் வருவதால் 'லெப்பை' என்றே குறிப்பிடவும். பட்டாணி, ஷரீப், பரிமளம் என்ற பிரிவுகளை குறிப்பிட வேண்டாம். ஒருவர், தான் எந்த சாதியும் சாராதவர் என்று குறிப்பிட்டாலோ அல்லது மேற்குறிப்பிட்ட சாதிகள் அல்லாமல் வேறு சாதி குறிப்பிட்டாலோ அவர் இடஒதுக்கீடு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட சலுகைகள் பெறுவதற்கு தகுதியற்றவராகக் கருதப்படுவார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தக் கணக்கெடுப்பில் 
பகுதி அ: அமைவிட விவரங்கள் 
பகுதி ஆ: வீட்டுப் பட்டியல் சுருக்கம் 
பகுதி இ: மின்வாரிய எண் மற்றும் உ பிளாக் எண் 
பகுதி ஈ: தனிநபர் விவரங்கள் (நபரின் பெயர், குடும்பத் தலைவருக்கு உறவு, பாலினம், பிறந்த தேதி, தற்போதைய திருமண நிலை, தந்தையின் பெயர், தாயின் பெயர், தொழில், படித்து முடித்த கல்வி நிலை, மாற்றுத் திறனாளிகள், மதம், சாதி 
பகுதி உ: குடியிருப்பு விவரங்கள் 
பிரிவு 1: வீடு/குடியிருப்பு, 
பிரிவு 2: குடியிருப்பில் உள்ள உறுப்பினர் விவரம், 
பிரிவு 3: வேலை மற்றும் வருமானம் சார்ந்தவை,
பிரிவு 4: சொத்துக்கள், 
பிரிவு5: சொந்த நிலை மற்றும் இதர சொத்துக்கள்) ஆகிய விவரங்கள் கேட்கப்பட உள்ளன. இதுபற்றிய தகவல்களை முன்னரே தயாரித்து வைத்துக் கொண்டு, பதட்டமின்றி பதில் சொல்ல வேண்டும்.
மேலும், குடும்ப வருமானம் என்பது மிக முக்கியமானதாகும். மாத வருமானத்தைக் கொண்டு ஆண்டு வருமானம் கணிக்கப்படும். எனவே மாதத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் குறையாமலும், ஆண்டிற்கு 24 ஆயிரம் ரூபாய் குறையாமலும் குறிப்பிட வேண்டும். சிலர் கவுரவத்திற்காக ஆண்டு வருமானத்தை கூடுதலாக குறிப்பிடுவதன் மூலம் அவர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி உதவிச் சலுகைகளைப் இழக்க நேரிடும். பெயர் உட்பட தாங்கள் குறிப்பிட்ட விவரங்கள் சரியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை குடும்பத் தலைவர் சரிபார்த்துக் கொள்வது அவசியமாகும். இதுபோக 
பகுதி ஊ-வில் கட்டாய வெளியீடுகள் விவரங்களை உறுதிப்படுத்துதல், குடியிருப்பில் உள்ளோர் தாங்கள் அளித்த விவரத்தில் மதம் /சாதி/ இனம் தவிர இதர விவரங்களை பொதுவாக்கி வெளியிட விருப்பம் தெரிவிக்கின்றனரா என்ற கேள்விக்கு ஆம் என்று குறிப்பிட வேண்டும். இந்த கணக்கெடுப்பு முடிந்ததும் தங்களிடத்தில் அடையாள சீட்டு தரப்படுகிறதா? கதவில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதா? என்பதில் கவனத்தோடு இருக்க வேண்டும். இந்த கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வை தமுமுக தொண்டர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் இமாம்கள் மக்களிடம் பரப்புவதுடன் தங்கள் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளும் முறையாக பதிவுச் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிச் செய்ய வேண்டும். முஸ்லிம்கள் அனைவரும் கண்காணிப்புடன் செயல்பட்டு எந்தவொரு முஸ்லிம் பெயரும் விடுபடாமல் பதிவு செய்வதில் முழு கவனம் செலுத்த வேண்டியது மிகவும் இன்றியமையாத கடமையாகும்.
(எம்.எச். ஜவாஹிருல்லா)

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Post a Comment

0 Comments