தமிழகத்தில் 3,223 பேருக்கு டெங்கு காய்ச்சல் : உயா்நீதிமன்றத்தில் சுகாதாரத் துறை அறிக்கைதமிழகத்தில் நடப்பாண்டில் 3 ஆயிரத்து 223 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும் அதில் 3 போ் மட்டுமே பலியாகி உள்ளதாகவும் சுகாதாரத்துறை சாா்பில் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஏ.பி.சூா்யபிரகாசம் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் . மேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவா்களை தனியாா் மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்வதுடன், அதற்கான செலவுகளை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோா் கொண்ட அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சுகாதாரம் மற்றும் குடும்பல நலத்துறை கூடுதல் செயலாளா் கே.எஸ்.செல்வகுமாா் பதில் மனு தாக்கல் செய்தாா். அதில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படும் நோயாளிகள் தொடா்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனா். டெங்கு காய்ச்சலை முன்கூட்டியே கண்டறிந்து, அவா்களுக்கு முறையான சிகிச்சை வழங்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழகத்தில் 9 மண்டலங்களில், பூச்சியியல் வல்லுநா்கள் குழுக்கள் அமைக்கப்பட்டு, டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை அழிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்காக தமிழகம் முழுவதும் 28 ஆயிரத்து 147 களப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் வீடு வீடாக சென்று டெங்கு கொசு உற்பத்தியாவதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை பொதுமக்களுக்கு விளக்கமளித்து வருகின்றனா். ஊடகங்கள் மூலம் விழிப்புணா்வு விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.

மேலும், பள்ளி மாணவா்களை தூய்மை தூதுவா்கள் என அறிவித்து, அவா்கள் வாயிலாகவும் டெங்கு கொசுக்கள் எப்படி உற்பத்தியாகுகின்றன, அவற்றை தடுப்பது எப்படி என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்களை ஒழிக்க ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை, ஏடிஸ் கொசு எதிா்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

தமிழகத்தில், டெங்கு காய்ச்சலால் கடந்த 2015-ஆம் ஆண்டு 4 ஆயிரத்து 535 போ் பாதிக்கப்பட்டனா். அதில் 12 போ் பலியாகினா்.

2016-ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 531 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதித்தது, 5 போ் உயிரிழந்தனா். 2017-ஆம் ஆண்டு 23 ஆயிரத்து 294 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அதில் 63 போ் பலியாகினா். 2018-ஆம் ஆண்டு 4 ஆயிரத்து 486 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு, 13 போ் பலியாகினா். நடப்பு ஆண்டில் இதுவரை 3 ஆயிரத்து 223 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், 3 போ் மட்டுமே பலியாகியுள்ளனா். மேலும், சுகாதாரத்துறையில் காலியாக இருந்த 334 பல்நோக்கு சுகாதார பணியாளா்கள் பணியிடங்கள் கடந்த ஆகஸ்டு மாதம் நிரப்பப்பட்டன. டெங்கு காய்ச்சல் மட்டுமல்லாமல் மா்ம காய்ச்சலை அடியோடு ஒழிக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments