பாபர் மசூதியின் கதவை ராஜீவ் காந்தி திறந்துவிடாமல் இருந்திருந்தால் அது இன்று வரை மசூதியாகவே இருந்திருக்கும் – அசாதுதீன் ஒவைசி..!அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி, அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கு சொந்தம் என்றும், அங்கேயே ராமர் கோவில் கட்ட மத்திய அரசு, அறக்கட்டளை ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

மேலும் இஸ்லாமியர்களுக்கு சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சுற்றியுள்ள சுமார் 67 ஏக்கர் பகுதியிலோ அல்லது அவர்கள் விரும்பக்கூடிய வேறு எந்தப் பகுதியிலோ மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் மத்திய அரசு அல்லது மாநில அரசால் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

இதுகுறித்து அகில இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவரும், ஹைதராபாத் எம்பி-யுமான அசாதுதீன் ஓவைசி நிருபர்களிடம் கூறியதாவது :

அயோத்தி நில விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பில் எனக்கு திருப்தி இல்லை. உச்ச நீதிமன்றம் உண்மையில் உச்சமானதுதான், அதேநேரம் தீர்ப்பில் தவறிழைக்காமலே இருக்கும் எனவும் கூறிவிட முடியாது. எங்களுக்கு அரசியலமைப்பில் முழு நம்பிக்கை உள்ளது, நாங்கள் எங்கள் உரிமைக்காக போராடிக்கொண்டிருந்தோம். எங்களுக்கு 5 ஏக்கர் நிலம் நன்கொடையாக தேவையில்லை. நாங்கள் நிலத்திற்கான உரிமையைத்தான் கேட்டோம். 5 ஏக்கர் நில சலுகையை நிராகரிக்க வேண்டும்.

நாங்கள் நிலத்திற்காக யாசகம் கேட்டகவில்லை. இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் ஒரு மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை வாங்க முடியாத அளவுக்கு தாழ்மை நிலைமையில் இல்லை. இது எங்கள் சட்ட உரிமையைப் பற்றிய வழக்கு, நிலம் தேவை என கேட்ட வழக்கு இல்லை.

காங்கிரஸ் அதன் உண்மையான நிறத்தை காட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வஞ்சகமும், பாசாங்குத்தனமும் இல்லாதிருந்தால், 1949ல் மசூதி இருந்த இடத்தில் சிலைகள் வைக்கப்பட்டிருக்காது. ராஜீவ் காந்தியால் பூட்டுகள் திறக்கப்பட்டு இருந்திருக்காவிட்டால் மசூதி இன்னமும் கூட இருக்கும். அதேபோலத்தான், பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது பிரதமராக இருந்த காங்கிரசின் நரசிம்மராவ் தனது கடமைகளை சரியாக நிறைவேற்றியிருந்தால் மசூதி இருந்திருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கு காங்கிரஸ் எப்போதுமே ஆதரவு அளிக்கும் என்று, காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments