புரட்டாசி விரதம் எதிரொலி கட்டுமாவடி மார்க்கெட்டில் மீன்கள் விலை குறைவு.!



புரட்டாசி மாதம் காரணமாக கட்டுமாவடி மார்க்கெட்டில் மீன்கள் விலை குறைவாக இருந்தது.

கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு 15-க்கும் மேற்பட்ட மீன் ஏலக்கடைகள், இறால் கம்பெனிகள் செயல்படுகின்றன. இங்கு கட்டுமாவடி, மணமேல்குடி, பொன்னகரம், புதுக்குடி சேதுபாவாசத்திரம், மந்திரிப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களும் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள விசைப்படகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களும் விற்பனைக்கு வருகிறது.

அதுமட்டுமில்லாமல் ராமநாதபுரம், பாம்பன், ராமேசுவரம், தூத்துக்குடி, காரைக்கால், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளிலிருந்து சரக்கு வாகனங்கள் மூலம் தினமும் மீன்கள் விற்பனைக்கு வருகிறது. இந்த மீன்களை வாங்குவதற்காக மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் சரக்கு வாகனங்களில் தினமும் வந்து செல்கின்றனர். ஞாயிறு, செவ்வாய், வியாழன் போன்ற நாட்களில் விசைப்படகு மீனவர்கள் கரை திரும்புவதால் மீன் வரத்து அதிகமாக இருக்கும்.

இந்நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதாலும், பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதாலும் அதிகமான மக்கள் விரதம் இருக்கின்றனர். புரட்டாசி மாதம் 30 நாட்களும் விரதம் இருப்பார்கள். இதனால் இம்மாதம் முழுவதும் சைவ உணவே சாப்பிடுவார்கள். இந்த மாதம் தொடங்கிய நாள் முதல் கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் விற்பனை வெகுவாக குறைந்தது. வெளியூர்களிலிருந்து வரக்கூடிய வியாபாரிகளும் மீன்களை ஏலம் எடுக்க வரவில்லை. இதனால் கட்டுமாவடி, மணமேல்குடி மீன் மார்க்கெட்டுகளில் கூட்டம் குறைவாகவே இருந்தது.

மேலும் சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருவதாலும், பலத்த காற்று வீசி வருவதாலும் பெரும்பாலான நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன் வரத்தும் குறைந்துள்ளது. நேற்றும் மீன்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் இன்னும் ஒரு சில நாட்களில் மீன், இறால், நண்டு போன்றவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர். இம்மாதம் முழுவதும் மீன் விற்பனை மந்தமாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments