வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க வசதி - தேர்தல் ஆணையம் தயார்.!!அடுத்த ஆண்டு தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெளிநாடுவாழ் இந்தியர்களை தபாலில் வாக்களிக்க அனுமதிக்கலாம் என தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே, கடந்த அக்டோபர், நவம்பர்மாதங்களில் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டங்களாக வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இதே நடைமுறையில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் (இ.டி.பி.பி) வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் சார்பில் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில்,"வெளிநாடுவாழ் இந்தியர்களை தபால் மூலம் வாக்களிக்கசெய்வதற்கு தொழில்நுட்ப ரீதியாகவும் நிர்வாகரீதியாகவும் தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இ.டி.பி.பி. என்றழைக்கப்படும் தபால் வாக்கை பதிவு செய்ய வெளிநாடுவாழ் இந்தியர்கள், அவர்கள் வசிக்கும் நாடுகளின் இந்திய தூதரகத்தை அணுக வேண்டும். குறிப்பாக தேர்தல் அறிவிக்கை வெளியான 5 நாட்களுக்குள் தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

இந்திய தூதரகத்தின் பரிந்துரையின்பேரில் வெளிநாடுவாழ் இந்தியரின் சொந்த ஊரை சேர்ந்த தேர்தல் அதிகாரி அவருக்கு இ-மெயில் வாயிலாக வாக்குச் சீட்டை அனுப்பி வைப்பார். அந்த வாக்குச் சீட்டை பதிவிறக்கம் செய்து வாக்கை பதிவு செய்யவேண்டும். இந்திய தூதரகத்தின் சான்றுடன் தபால் வாக்கு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும்.

சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிக்கு தபால் வாக்கு வந்து சேரும். அதன்பிறகு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு தபால் வாக்கு அனுப்பி வைக்கப்படும்.

கேரளாவை சேர்ந்த சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கக் கோரி கடந்த 2014-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜரான மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், "வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்களிக்க ஏதுவாக புதிய சட்டம் இயற்றப்படும்" என்று உறுதி அளித்தார்.

இதுகுறித்து மத்திய அரசு சார்பில் ஏற்கெனவே அனைத்து கட்சிகூட்டம் நடத்தப்பட்டது. இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சி மட்டுமே வெளிநாடுவாழ் இந்தியர்களின் வாக்குரிமைக்கு முழு ஆதரவுஅளித்தது. பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பின.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments