‘பாஸ்டேக்’ திட்டம் பிப்ரவரி 15ந்தேதிக்கு தள்ளிவைப்பு- நெடுஞ்சாலைத்துறை முடிவு

சுங்கச்சாவடிகளில் இலகுரக மற்றும் கனரக வாகனங்களுக்கு தனித்தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் சுங்கச்சாவடிக்கு சுங்கச்சாவடி வேறுபடும்.

கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக ‘பாஸ்டேக்’ முறையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிமுகம் செய்தது.

‘பிரீபெய்ட்’ கணக்கில் இருந்து நேரடியாக கட்டணங்களை செலுத்துவதற்கான ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது. எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம். குறிப்பிட்ட வாகனத்தின் பதிவு எண் உள்ளிட்ட தகவல்களின் அடிப்படையிலேயே வாங்க முடியும்.

அந்த ஸ்டிக்கரை வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்டிவிட வேண்டும். சுங்கச்சாவடியை கடக்கும்போது அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சென்சார் மூலம் அந்த வாகனத்துக்குரிய கட்டணம் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுவிடும்.

அது பற்றிய தகவல் மற்றும் எவ்வளவு பணம் மீதம் உள்ளது என்ற விபரமும் உடனடியாக செல்போனுக்கு குறுஞ்செய்தியாக வந்து விடும். பெரும்பாலான வாகன ஓட்டிகள் இந்த முறைக்கு மாறி விட்டனர்.

இதுவரை ‘பாஸ்டேக்’ இல்லாத வாகனங்களும் அனுமதிக்கப்பட்டன. ஆனால் இன்று நள்ளிரவு 12 மணி முதல் ‘பாஸ்டேக்’ கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது.

பாஸ்டேக் இல்லாமல் வரும் வாகனங்கள் உடனடியாக பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் தனி ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளிலும் இன்று இரவு முதல் ‘பாஸ்டேக்’ இருக்கும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

85 சதவீத வாகனங்கள் ‘பாஸ்டேக்’ முறையை கடைபிடிப்பதாகவும் எனவே இன்று முதல் கட்டாயமாக்குவதில் பிரச்சினை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் 70 சதவீத வாகனங்கள் மட்டுமே பாஸ்டேக்கை பயன்படுத்தி வருவதாகவும் தொழில்நுட்ப ரீதியாக பல சிக்கல்கள் இருப்பதாகவும் எனவே காலநீட்டிப்பு அவசியம் என்றும் வாகன உரிமையாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் பிப்ரவரி 15-ந்தேதி வரை தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டது. எனவே பிப்ரவரி 15-ந் தேதி வரை ‘பாஸ்டேக்’ இல்லாமலும் சுங்கச்சாவடிகளில் பயணிக்க முடியும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments