கோபாலப்பட்டிணத்தில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரி இளைஞர்கள் ECR-ல் திடீர் சாலை மறியல்: அதிகாரிகளின் உறுதிமொழியை அடுத்து போராட்டம் தற்காலிக ஒத்திவைப்பு!



புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் கிராமத்தில் நிலவி வரும் திடக்கழிவு மேலாண்மைப் பிரச்சினை தொடர்பாக, கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த இளைஞர்கள் இன்று 14/02/2026 சனிக்கிழமை காலை கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதிமன்ற உத்தரவு அலட்சியம்
கோபாலப்பட்டிணம் கிராமத்தில் சேரும் குப்பைகளைக் கொட்டுவதற்கு முறையான இடத்தைத் தேர்வு செய்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், மாவட்ட நிர்வாகம் அந்த உத்தரவைச் செயல்படுத்தாமல் மெத்தனம் காட்டி வருவதாகக் கூறி, சுமார் 150- க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து குப்பைகளை சாலையின் குறுக்கே கொட்டியும், பதாகைகளை ஏந்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்தத் திடீர் மறியலால் ஈசிஆர் சாலையில் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

அதிகாரிகளுடன் சமரசப் பேச்சுவார்த்தை
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் காவல்துறை அலுவலர்கள் போராட்டக்காரர்களுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு கீழ்க்கண்ட முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன,

புதிய இடத்தேர்வு 
பொதுமக்கள் வசிப்பதற்கு அருகில் இல்லாத ஒரு பாதுகாப்பான இடத்தில் திடக்கழிவு மேலாண்மை கூடாரம் அமைக்கப்படும். இதற்கான இடத்தை வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து ஒரு வார காலத்திற்குள் ஆய்வு செய்து இறுதி செய்வார்கள்.

நிர்வாக அனுமதி 
போர்க்கால அடிப்படையில் திடக்கழிவு மேலாண்மை கூடாரம் அமைத்தல், புதிய குப்பை வண்டிகள் வழங்குதல் மற்றும் கூடுதல் திடக்கழிவு பணியாளர்களை நியமித்தல் ஆகியவற்றுக்கான நிர்வாக அனுமதி ஆணைகளை உடனடியாகப் பெற்றுப் பணிகள் முடிக்கப்படும்.

தற்காலிக நடவடிக்கை 
நிரந்தர தீர்வு எட்டப்படும் வரை, தற்காலிகமாகப் பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

போராட்டம் ஒத்திவைப்பு
அதிகாரிகள் தரப்பில் அளிக்கப்பட்ட இந்த எழுத்துப்பூர்வமான உறுதியான வாக்குறுதிகளை ஏற்றுக்கொண்ட போராட்டக்காரர்கள், தங்களது சாலை மறியல் போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. உரிய காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மீண்டும் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என இளைஞர்கள் தெரிவித்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments