புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி-யாக நியமிக்கப்பட்ட நிஷா பார்த்திபன் ஐ.பி.எஸ் பொறுப்பேற்பு! குற்ற சம்பவங்களை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்படும் என பேட்டி!!புதுக்கோட்டை மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த பாலாஜி சரவணன், சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக பெரம்பலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த நிஷா பார்த்திபன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் புதுக்கோட்டையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நிஷா பார்த்திபன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவர் மாவட்டத்திற்கு 49-வது போலீஸ் சூப்பிரண்டாவார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இதற்கு முன்பு வித்யாகுல்கர்னி, உமா, ராஜேஸ்வரி ஆகிய 3 பெண் போலீஸ் சூப்பிரண்டுகள் பணியாற்றியுள்ளனர். நிஷா பார்த்திபன் 4-வது பெண் போலீஸ் சூப்பிரண்டாவார். புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபனுக்கு போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அவர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நடத்திய காணொலி காட்சி ஆய்வு கூட்டத்தில் அவர் பங்கேற்றார். போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் கூறியதாவது:- தற்போது கொரோனா காலக்கட்டமாக இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு தேவையான உதவிகளை போலீஸ் தரப்பில் இருந்து செய்து தரப்படும். மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்படும். ரவுடியிசம், மணல் கடத்தல், சாராயம் காய்ச்சுதல் உள்பட சட்டவிரோத நடவடிக்கைகள் தடுக்கப்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலை விபத்தினை தடுக்க வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது, போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பொதுமக்கள், போலீஸ் நிலையங்களில் அளிக்கும் புகார் மனுக்கள் மீது போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் நிலையங்களை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும். புகார்கள் தொடர்பாக பொதுமக்கள் எந்நேரமும் காவல்துறையினரை அணுகலாம். நவீன தொழில்நுட்பங்கள் காவல்துறையில் பயன்படுத்தப்படும். ரோந்து பணிக்கும் செல்லும் போலீசார் பட்டா புத்தகத்தில் கையெழுத்திடுவது வழக்கம். இதனை மின்னணு முறையில் இ-பட்டா புத்தகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments