கொத்தமங்கலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை தனி ஒருவராக நட்டு வளர்த்து வரும் இயற்கை ஆர்வலர்!கொத்தமங்கலத்தில் கடந்த சில வருடங்களாக இயற்கை ஆர்வலர் ஒருவர் தனி ஒருவராக பொது இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு தினசரி தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறார். இவரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

கீரமங்கலத்தை அடுத்த கொத்தமங்கலம் அருகே உள்ள சுண்டாங்கிவலசை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38). இயற்கை ஆர்வலரான இவர் அதே ஊரில் உள்ள அய்யனார் கோவில் வளாகத்தில் அரசு நிலத்தில் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு கூண்டுகள் அமைத்து தினசரி தண்ணீர் ஊற்றி பராமரித்து வளர்த்து வருகிறார்.

அதே போல முக்கிய தினங்கள் தொடங்கி தேசிய, தமிழக தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாட்களில் மரக்கன்றுகள் நடுவதுடன் தனது திருமண நாள், குழந்தைகள் பிறந்த நாள் என மரக்கன்றுகளை நட்டு வருகிறார். சமீபகாலமாக ஊரில் யார் திருமணம் செய்தாலும், பிறந்த நாள் கொண்டாடினாலும் அவர்களையும் வந்து மரக்கன்று வைக்கச் சொல்லி பராமரித்து வருகிறார்.
ரமேஷ் சைக்கிளில் தண்ணீர் எடுத்து வந்து மரக்கன்றுகளுக்கு ஊற்றுவதை படத்தில் காணலாம்.

நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு அருகில் உள்ள குளத்தில் இருந்து குடங்களில் தண்ணீர் எடுத்து சைக்கிள் மூலம் கொண்டு சென்று மரக்கன்றுகளுக்கு ஊற்றி வருகிறார். மேலும் சொந்த செலவிலேயே மரக்கன்றுகள், கூண்டுகள் வாங்குவதுடன், கசிவு நீர் பாசனத்திற்காக பானைகளும் வாங்கி வைத்து தண்ணீர் ஊற்றி வருகிறார்.

இது குறித்து ரமேஷ் கூறியதாவது:-
கஜா புயலில் ஏராளமான மரங்கள் விழுந்தன. இதனால் மீண்டும் மரங்களை நட்டு வளர்க்கலாம் என்று பசுமை புரட்சி என்ற பெயரில் அய்யனார் கோவில் வளாகத்தில் உள்ள அரசு நிலத்தில் மரக்கன்றுகளை நடத் தொடங்கினேன்.

அதுமட்டுமின்றி பல்வேறு ஊர்களுக்கும் சென்று வன்னி, வின்னி, ருத்திராட்சம், திருவோடு, அத்தி என 50-க்கும் மேற்பட்ட வகையான மரக்கன்றுகளை வாங்கி வந்தேன். அத்தி காய்க்கத் தொடங்கிவிட்டது. முதலில் நட்ட கன்றுகளை ஆடுகள் மேய்ந்ததால் அதற்கு கூண்டுகள் அமைத்தேன். இதுவரை ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு அதில் 500 கன்றுகளை மரமாக வளர்த்துவிட்டேன்.

நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் தம்பி ராமையாவின் தம்பி மனைவி ராஜகுமாரி கொரோனாவில் உயிரிழந்த தகவல் அறிந்து அவர் பெயரிலும் மரக்கன்று நட்டுவிட்டேன். கடந்த வாரம் வந்த சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் நான் வளர்க்கும் மரக்கன்றுகளை பார்த்துவிட்டு பாராட்டியதோடு மேலும் மரக்கன்றுகள் வளர்க்க என்ன உதவி வேண்டும் என்று கேட்டார்.

ஒரு ஆழ்குழாய் கிணறு இருந்தால் இந்த பகுதியில் உள்ள சுமார் 80 ஏக்கர் அரசு நிலத்திலும் மரக்கன்றுகள் நட்டு குறுங்காடுகள் அமைத்து பசுமையாக்குவேன் என்று சொன்னேன். உடனே ஆழ்குழாய் கிணறு அமைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

இன்னும் சில வருடங்களில் கொத்தமங்கலத்தில் அனைத்து வகை மரங்களுடன் குருங்காட்டை அமைத்துவிடுவேன். என்னைபோல ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்கள் முன்வந்து மரங்களை வளர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். ரமேசின் இந்த செயலை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments