கோபாலப்பட்டிணத்திற்கு செல்போன் கோபுரத்தின் (டவர்) தேவையும்! சில தவறாக பரப்படும் வதந்திகளுக்கான விளக்கங்களும்!!கோபாலப்பட்டிணத்தில் செல்போன் டவர் கண்டிப்பாக நிறுவப்பட வேண்டும் என நினைப்பவர்கள் இந்த கட்டுரையை நேரம் ஒதுக்கி முழுமையாக படிக்க வேண்டுகிறோம்! உங்களது மேலான கருத்துக்களையும் நாங்கள் எதிர்பார்கின்றோம்!!

ஒரு காலத்தில் தரைவழி தொலைபேசியை (லேண்ட்லைன் போன்) மட்டுமே நம்பி இருந்த வேளையில் வரப்பிரசாதமாக வந்தது தான் கைப்பேசி (செல்போன்). அதன் உபயோகம் இன்று நம்மில் ஒன்றர கலந்துவிட்டது என்பதில் யாருக்கும் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. அதுவும் இன்றைய காலகட்டத்தில்  வீட்டில் இருந்து கொண்டே படிப்பதற்கும், வீட்டில் இருந்து கொண்டே அலுவலக வேலை செய்வதற்கும், வீட்டில் இருந்து கொண்டே அயல் நாடுகளில் உள்ள தங்களுடைய கடைகளை கண்காணிப்பதற்கும் இன்றியமையாததாக ஆகிவிட்டது.

நமது ஊர் கோபாலப்பட்டிணத்தில் இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு அதிகரித்ததன் காரணமாகவும், ஏற்கனவே கோபாலப்பட்டிணத்திற்கு என்று தனியாக செயல்பட்டு வந்த செல்போன் கோபுரம் செயலிழந்ததாலும் தற்பொழுது செல்போன் சிக்னல் சரியாக கிடைக்காததால் மேலே குறிப்பிடப்பட்ட வேலைகளை செய்வதற்கும், மாணவர்கள் படிப்பதற்கும், அயல் நாட்டில் உள்ள உறவினர்களுடன் கலந்துரையாடுவதற்கும் மக்கள் பெரும் சிரமங்களை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒரு அவசர செய்தியை கூட பகிர்ந்து கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. 

தற்பொழுது உள்ள சூழ்நிலையில் செல்போன் ஒலித்தால் வீட்டை விட்டு வெளியிலோ அல்லது மாடிக்கோ சென்று தான் பேசும் நிலைமை உள்ளது. இதனால் முதியவர்களும், பெண்களும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். கடந்த ஓராண்டுக்கு மேலாக கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக பள்ளிக்கூடங்களில் வகுப்புகள் நடைபெறாமல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொண்டு கல்வி பயில வேண்டி மொட்டை மாடிக்கும், திறந்த வெளிக்கும் செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. இதனால் பெண் பிள்ளைகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். செல்போன் சிக்னல் கிடைக்காததால் செல்போனை ஒரு சிலர் வீட்டின் வெளிப்பகுதியிலும், ஜன்னல் ஓரங்களிலும் மற்றும் வீட்டு மாடியிலும் வைத்துக் கொண்டு காத்திருப்பவர்கள் ஏராளம்!

அதே வேளையில் செல்போன் டவர்களை பற்றி சில வதந்திகள் சமூக வலைதளங்களின் வழியாக மக்களிடையே பரப்பப்பட்டு வருகின்றன. செல்போன் கோபுரத்திலிருந்து வரும் கதிர்வீச்சு மின்காந்த அலைகளை சார்ந்தது. இவைகளினால் உடல்நல பாதிப்பு ஏற்படும் என்பது பற்றி எந்த ஒரு மருத்துவ நிரூபனமும் கிடையாது. ஆகவே உலகெங்கும் செல்போன் சேவை பரவிக்கிடக்கின்றன. இந்த மின்காந்த அலைகள் நம்முடைய ஒவ்வொரு விஷயத்திலும் கலந்துதான் உள்ளது. உதாரணமாக வீட்டில் உபயோகப்படுத்தப்படும் டிவி ரிமோட், ஏசி ரிமோட், பிள்ளைகள் விளையாடும் கார் ரிமோட், வீட்டில் இருக்கும் வைஃபை ஹாட்ஸ்பாட், டிஷ் டிவி, டிவி ஆன்டனாக்கள் இன்னும் சேட்டிலைட் போன்களும் மின்காந்த அலைகளால் முழு பூமியையும் ஆக்கிரமித்து உள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே நம்முடைய பிள்ளைகளின் ஆன்லைன் வகுப்புகள், வீட்டில் இருந்து கொண்டு அலுவலக பணி செய்வது, வெளிநாடுகளில் உள்ளவர்களை தொடர்பு கொள்வது மற்றும் உறவினர்களுடன் உரையாடுதல் இவைகள் அனைத்தும் தடை இல்லாமல் நடைபெற நமது  ஊருக்கு செல்போன் டவர் கட்டாயம் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். மேலும் தவறான புரிதல்களுடன் இருக்கும் மக்களுக்கு தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது நமது இன்றைய தேவையின் கட்டாய கடமையாக உள்ளது.

முற்காலத்தில் இது போலவே மின்சாரம் புதிதாக வரும்போது மின்சாரம் தாக்கி மனிதன் இறந்து விடுவான் என்றும் எனவே இவை எங்களுக்கு வேண்டாம் என  மக்கள் போராட்டம் கண்டனர்.

அதேபோல கேஸ் சிலிண்டர் வந்தபொழுது அது வெடித்தால் அந்த வீட்டுக்காரர்களும், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களும் இறந்து விடுவார்கள் எனவே இவை பேராபத்து விளைவிக்கக்கூடியது என மக்கள் கேஸ் சிலிண்டரை எதிர்த்தார்கள். ஆனால் இன்று மின்சாரமும், கேஸ்-சும் நம்முடைய வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. மின்சாரமும், கேஸ்சும் ஆபத்தானது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.  அப்படி இருந்தும் அது இல்லாமல் இன்று நம்முடைய வீடு இல்லை.  ஆனால் செல்போன் டவரினால் ஆபத்து என்பது நிரூபிக்கப்படாத ஒன்று.  

அப்படி இருக்க மின்சாரம், கேஸ் இரண்டும் ஆபத்து என்று நிரூபிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டு, ஆபத்து என்று நிரூபிக்கப்படாத ஒன்றை (டவரை) மறுப்பது என்பது நம்முடைய அறியாமை.

செல்போன் டவர் வதந்திகள் எப்பொழுதும் வந்த வண்ணமாகவே உள்ளன. உதாரணமாக செல்போன் டவர்களால் கேன்சர் உண்டாகும் என்று வதந்திகள் பரப்பப்படுகிறது. ஆனால் இது சம்மந்தமாக மருத்துவரோ அல்லது ஆராய்ச்சியாளர்களோ இது வரை நிருபிக்கவில்லை.

அதுபோலவே கொரானா நோய்க்கு இஞ்சி சாறும், பூண்டு சாறும் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்ற வதந்தி. பிறகு அரசு அதை கண்டித்தது. அதுபோல நிரூபிக்கப்படாத மருந்துகளை வெளியிட்ட போலி மருத்துவர்களையும் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா என்ற நோய் 5ஜி மின்காந்த அலைகளால் தான் ஏற்பட்டது என்றும், 5G டவர்களால் தான் அனைவருக்கும் கொரோனா நோய் தாக்கியது என்ற ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவவிடப்பட்டது. கொரனோ நோயின் கோரப் பிடியில் மாட்டிக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் நமது நாட்டில் இதுவரை 5ஜி அலைவரிசை கிடையாது. 5ஜி அலைவரிசை இல்லாத போது எப்படி இந்தியாவிற்கு கொரோனா வந்தது. ஆகவே இது எவ்வளவு பெரிய வதந்தி என்பதை மக்கள் உணர்ந்து கொண்டனர். நீண்ட காலமாக இந்திய டெலிகாம் நிறுவனங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 5ஜி சேவைக்கான சோதனைக்கு சில மாதங்களுக்கு முன்புதான் மத்திய டெலிகாம் துறை அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19 என்ற நோய் கொரோனா என்ற கிருமியால் பரவியது என்பது உலகம் அறிந்த உண்மை. அந்த கொரோனா வைரஸை ஆராய்ச்சி செய்து அதற்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு உபயோகத்தில் வந்துவிட்டன. ஆகவே சமூக வலைத்தளங்களில் வரும் எல்லா வதந்திகளையும் உங்களுடைய சுய பரிசோதனைக்கு உட்படுத்தாமல் நம்பி விடாதீர்கள்.

கேன்சர் என்பது பலவித காரணங்களால் ஏற்படும் ஒரு நோய். இன்று வரை நமது ஊரில் பல நபர்கள் கேன்சரினால் இறந்துள்ளனர். இன்னும் இதே நாளில் (19-07-2021) கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் நமது  ஊரில் உள்ளனர். செல்போன் டவர் அருகாமையில் குடியிருந்து வரும் யாரும் கேன்சரினால் பாதிக்கப்பட்டனர் என்று எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இதன் மூலம் நாம் விளங்க வேண்டியது செல்போன் டவரினால் கேன்சர் என்ற நோய் ஏற்படுவது இல்லை.

இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவை வகைகள் இருந்தாலும், சில ஆண்டுகளாக சிட்டுக்குருவியைப் பற்றி மட்டுமே அதிகம் பேசப்படுகிறது. குறிப்பாக செல்போன் கதிர்வீச்சால் சிட்டுக்குருவி அழிந்து வருகின்றன என்ற ஆதாரமற்ற தகவல் வேகமாகப் பரவிவருகிறது.

சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு உண்மையான காரணங்களைத் தேடாமல், செல்போன் கதிர்வீச்சுதான் காரணம் என்று தவறாகப் பிரபலப்படுத்தப்பட்ட காரணம் மக்கள் மனதில் நன்றாகவே பதிந்திருக்கிறது. ஆனால், உலகில் ஆபத்தில் உள்ள உயிரினங்கள் குறித்து முறைப்படி அறிவிக்கும் IUCN அமைப்பு சிட்டுக்குருவியை LC (Least Concern) - கவலைப்படத் தேவையில்லை என்ற நிலையிலேயே வைத்துள்ளது. அதுவே நிஜ அறிவியல். செல்போன் கதிர்வீச்சுதான் காரணம் என்று கூறுவது ஆதாரமற்ற போலி அறிவியல்.

ஆகவே பிற ஊர்களைப் போல நமது ஊரிலும் செல்போன் டவர்களை கொண்டுவர தகுந்த முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.  

இந்த கட்டுரை மூலம் GPM மீடியாவின் வாயிலாக மக்களுக்கு தெரியபடுத்த விரும்புவது நமது ஊரில் ஒரு செல்போன் டவர் கண்டிப்பாக அமைக்கப்பட வேண்டும் என்பதும், செல்போன் டவரினால் ஆபத்து உள்ளது என தவறாக புரிந்து கொண்டு எதிர்க்கும் ஒரு சில மக்கள் தெளிவு பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக ஒரு சிலரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த கட்டுரையை பதிவு செய்திருக்கின்றோம்.

நமது ஊரை சார்ந்த ஏராளமனோர் டவர் அமைப்பதற்கு GPM MEDIA-வின் மூலம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments