திருச்சி: கூட்டாஞ்சோறு சமைக்க தீயில் சானிடைசரை ஊற்றிய சிறுவன்; அலட்சியத்தால் பறிபோன உயிர்





  
திருச்சியில் சிறுவர்கள் இணைந்து கூட்டாஞ்சோறு சமைக்க தீ மூட்டும்போது ஏற்பட்ட விபரீதத்தில் சிறுவனொருவன் பலியாகியுள்ளான்.

திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட இ.பி. பகுதியை சேர்ந்தவர்  பாலமுருகன். கூலித் தொழிலாளியான பாலமுருகனுக்கு சுமதி என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். இவர்களின் மூன்றாவது மகன்தான், ஸ்ரீராம். இச்சிறுவன் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். தற்போது பள்ளிகள் கொரோனா காரணமாக செயல்படாத நிலையில் வீட்டில் இருந்த ஸ்ரீராம், தனது வீட்டில் நண்பர்களுடன் கூட்டாஞ்சோறு சமைத்து சாப்பிட விரும்பியுள்ளான்.

தந்தை பாலமுருகன் வேலை காரணமாக வெளியூர் சென்றிருந்த நிலையில், கூட்டாஞ்சோறு சமைத்து சாப்பிட விரும்பிய ஸ்ரீராம் தனது நண்பர்கள் மூவருடன் இணைந்து அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளான். அந்தவகையில், சிறுவர்கள் அனைவரும் அவர்களது வீடுகளிலிருந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை கொண்டு வந்துள்ளனர்.

அப்பொழுது கூட்டாஞ்சோறு அடுப்பில் பலாக்கொட்டை சுடுவதற்காக நெருப்பு மூட்ட சிறுவர்கள் முயன்றுள்ளனர். தீ மூட்டும்போது, சானிடைசர் ஊற்றினால் தீ நன்கு எரியும் என நினைத்துக்கொண்டு சிறுவர்கள் தீயில் சானிடைசரை பயன்படுத்தியுள்ளனர். அப்பொழுது யாரும் எதிர்பாராதவிதமாக, சானிடசரை ஊற்றிய ஸ்ரீராம் மீது நெருப்பு பற்றி எரிந்துள்ளது.

ஸ்ரீராம் உடனிருந்த சிறுவர்கள் பயந்துபோய் செய்வதறியாமல் அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, சிறுவன் ஸ்ரீராம் மீது பற்றிய தீயை அணைத்து முதலுதவி செய்துள்ளனர். பின்னர் தீக்காயமடைந்த ஸ்ரீராமை, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிறுவன் ஸ்ரீராமுக்கு சிகிச்சை தரப்பட்டிருக்கிறது. ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் ஸ்ரீராம் தற்போது இறந்திருக்கிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் ஸ்ரீராம் தீவிபத்தில் சிக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தை வேலை காரணமாக வெளியூர் சென்றிருந்த நேரத்தில், தான் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் படுத்திருந்ததாகவும், அப்போது விளையாட சென்றபோது தன் மகனுக்கு இத்தகைய விபரீதம் ஏற்பட்டதாகவும் ஸ்ரீராமின் தாய் சுமதி வேதனையுடன் தெரிவிக்கின்றார்.

நண்பர்களுடன் சேர்ந்து விளையாடும்பொழுது இத்தகைய விபரீதம் ஏற்பட்டதாகவும், மருத்துவமனையில் உயிரைக் காப்பாற்றுவது சிரமம் என்று மருத்துவர்கள் தெரிவித்த பிறகே மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறுவன் இறந்ததாகவும் தெரிவிக்கின்றார் அவரது அண்ணன் ரவி.

தற்போது பள்ளிகள் திறக்கப்படாததால் சிறுவர்கள் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால் எந்தவொரு விளையாட்டும் பெற்றோர் கண்காணிப்பின்றி குழந்தைகள் செய்யும்போது, இப்படியான அசம்பாவிதங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் விளையாடும் பொழுது அவர்கள் மீது அதிக கண்காணிப்புடன் பெற்றோர் இருக்க வேண்டும் என்பதையே, இச்சம்பவம் உணர்த்துகிறது. கண்காணிப்புடன் சேர்த்து, ‘எப்போதும் ஆளில்லாத இடத்துக்கு தனியாக சென்று விளையாடக்கூடாது, விளையாட்டுக்காகக்கூட தீ மூட்டுவது – கிணற்றுக்கு அருகில் செல்வது – வாகனங்கள் அதிகமிருக்கும் பகுதிக்கு செல்வது போன்றவற்றை செய்யக்கூடாது’ என குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லிக்கொடுக்க வேண்டியதும் அவசியம். அப்போதுதான், சிறுவன் ஸ்ரீராம் போன்ற இன்னொரு உயிரை நம்மால் காக்க முடியும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments