அரசு பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் வருகை இன்று முதல் செயலி மூலம் பதிவு
    பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் வருகைப் பதிவு என்பது ஏட்டில் பதிவு செய்யப்பட்டு, பின்னர் கல்வியியல் மேலாண்மை தகவல் மைய இணையதளத்தில் (எமிஸ்) பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை கடந்த சில ஆண்டுகளாகவே இருந்துவருகிறது. அதற்கு முன்பு வெறும் ஏட்டில் மட்டும் வருகைப்பதிவு மேற்கொள்ளப்பட்டு வந்தது.

தற்போது காகிதப் பயன்பாட்டை குறைக்கும்வகையிலும், டிஜிட்டல் நுட்பத்துக்கு அனைத்து துறைகளும் மாறிவரும் சூழ்நிலையில் பள்ளிகளில் வருகைப் பதிவை டிஜிட்டலுக்கு மாற்றும்வகையிலும் கல்வித் துறை திட்டமிட்டது. அதன்படி ஏற்கனவே அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில் அந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில், ஆகஸ்டு 1-ந் தேதி (இன்று) முதல் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு வருகைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டாம். பதிவை செயலி வாயிலாக பதிவு செய்தால் மட்டும் போதும். அதேபோல், ஆசிரியர்கள் விடுமுறைக்கு விண்ணப்பிப்பதையும் டி.என்.எஸ்.இ.டி. என்ற செயலியில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது. கல்வித்துறையின் இந்த அறிவிப்பு ஏற்கனவே நடைமுறையில் உள்ளதுதான், இதில் ஏட்டில் வருகைப்பதிவு செய்யவேண்டாம் என்ற உத்தரவு மட்டும்தான் புதிதாக இருக்கிறது. எனவே இதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று சில பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

வேறு சில ஆசிரியர்களோ, கல்வித்துறையின் உத்தரவு வேலையை குறைக்கும்விதமாக இருந்தாலும், செயலியில் பதிவு செய்யும்போது அதில் தடைகள் எதுவும் ஏற்படாதபடி, தொழில்நுட்ப பிரச்சினைகள் அனைத்தையும் களையவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments