குளமங்கலத்தில் மனு அளித்த ஒரே நாளில் புதிய சாலை அமைப்பு
புதுக்கோட்டை மாவட்டம், குளமங்கலம் தெற்கு கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் உள்ளன. இங்கு பல ஆண்டுகளாக சரியான சாலை வசதி இல்லாமல், பலரது தோட்டங்கள் வழியாக ஒத்தையடி பாதையை பயன்படுத்தி வந்தனர். அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட குடியிருப்பிற்குள் செல்ல முடியாத நிலை இருந்தது. இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி திறப்பு விழாவுக்கு வந்த அமைச்சர் மெய்யநாதனிடம் அப்பகுதி மக்கள் சாலை வசதி வேண்டி கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்ற அமைச்சர், அதனை அருகில் இருந்த புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரிடம் கொடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கோட்டாட்சியர் முருகேசன், வருவாய்த்துறை அதிகாரிகள், கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரவி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை அழைத்து, வரைபடம் மற்றும் ஆவணங்களை பெற்று ஆய்வு செய்தார். 

அப்போது 1953-ம் ஆண்டில் அந்த பகுதியில் நிலவழிப்பாதை சென்றதற்கான வரைபடம் இருந்தது. இதையடுத்து நில அளவையர்களை அழைத்து, வரைபடத்தில் உள்ளபடி நிலம் அளவை செய்யப்பட்டு, 5 பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் உடனடியாக சுமார் ஒரு கி.மீ. தூரத்திற்கு புதிய சாலையை அமைத்தனர். இந்த பணியில் திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுலகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா ரஞ்சித்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், வருவாய்த்துறை அலுவலர்கள் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments