மீன்பிடி தடைக்காலத்தை மாற்றி அமைக்க வேண்டும் மீனவ அமைப்பினர் கருத்து
கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தை அரசு அறிவிக்கிறது. நடப்பாண்டு கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதியில் இருந்து நாளை மறுநாள் (புதன்கிழமை) வரை இந்த தடை அமலில் இருக்கும்.

32 மீனவ கிராமங்கள்

இந்த காலகட்டத்தில் 240 குதிரை திறன் கொண்ட விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என அரசு அறிவுறுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மணமேல்குடி, கட்டுமாவடி, மீமிசல் உள்பட 32 மீனவ கிராமங்கள் உள்ளன. சுமார் 42 கிலோ மீட்டர் கடற்கரை பகுதியாகும். இங்கு 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் உள்ளன.

இதில் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் ராமேசுவரத்தை தாண்டி மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இந்த பகுதியில் வஞ்சிரம், நகரை நெத்திலி, சீலா, இறால், கணவாய் உள்ளிட்ட மீன்வகைகள் அதிகமாக சிக்கும். ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகங்கள் அமைந்துள்ளன.

ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வரையுள்ள பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. அவற்றில் 590 மீனவ கிராமங்களில் இருந்து ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க தற்போது தடை உள்ளது. மீதம் உள்ள சில கிராமங்கள் மேற்கு கடற்கரையில் வருவதால் அவர்களுக்கு மீன்பிடி தடைகாலம் கிடையாது. தமிழகத்தில் உள்ள மீன்பிடி தடைக்காலம் மீனவர்களுக்கும், மீன்களுக்கும் பொருத்தமாக இல்லை என்பதால் அரபிக்கடல் பகுதிகளில் உள்ள மாநிலங்களில் இருப்பது போன்று அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மீன்பிடி தடைக்காலத்தை அமல்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் சங்கத்தினர் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து மீனவர்கள் அமைப்புகள் மற்றும் அசைவ பிரியர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர்கள் அளித்த கருத்துகள் வருமாறு:-

தடைக்காலத்தை மாற்றி அமைக்க வேண்டும்

கோட்டைப்பட்டினம் மீனவர் சங்க தலைவர் ஹசன் முகைதீன்:- தமிழகத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை 61 நாட்கள் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பொதுவாக இந்த மாதத்தில் தான் அதிக அளவு மீன்கள் கிடைக்கும். இதனால் தமிழக அரசு தடைக்காலத்தை அக்டோபர், நவம்பர், டிசம்பர், மாதங்களில் மாற்றி அமைக்க வேண்டும். ஏனென்றால் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் மழைக்காலம் என்பதால் அடிக்கடி வங்கக்கடலில் புயல் ஏற்படும். இதனால் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த மாதங்களில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் நாட்கள் மிக மிக குறைவு. அதனால் மீன்பிடி தடைக்காலத்தை தமிழக அரசு பரிசீலனை செய்து மாற்றி அமைக்க வேண்டும்.

நாடு முழுவதும் ஒரேபோல் தடைக்காலம்

கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீன் வியாபாரி ஷேர்கான்:- தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தமிழக அரசு விசைப்படகு மூலம் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த தடைக்காலத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் இருந்து வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் தடைக்காலம் அமலில் இருக்கும் போது தமிழ்நாட்டை ஒட்டி உள்ள கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் தடைக்காலம் இல்லை. இதனால் ஆந்திர பகுதிகளில் உள்ள மீனவர்கள் சென்னை வரையிலும் வந்து மீன் பிடித்து செல்கின்றனர். அதேபோல் கேரளா மீனவர்கள் கன்னியாகுமரி வரை வந்து மீன் பிடித்து செல்கின்றனர். இதனால் தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் வலையில் போதிய அளவு மீன்கள் சிக்குவதில்லை. ஆகையால் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தடைக்காலத்தை அமல்படுத்தினால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும்.

இனப்பெருக்கம் நடக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது

மணமேல்குடி பகுதியை சேர்ந்த ராஜா:- ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் மீன்களின் இனப்பெருக்கம் நடக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மீன்களின் இனப்பெருக்கம் என்பது எல்லா மாதத்திலும் நடக்கும். ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதாலும், வெளியூர்களில் பணி புரியக்கூடியவர்கள் விடுமுறைக்காக உள்ளூர் திரும்புவதால் இந்த மாதங்களில் மீன்களின் தேவை அதிகமாக இருக்கும். இந்த மாதங்களில் முகூர்த்த நாட்களும் அதிகமாக இருப்பதால் மீன்கள் அதிகமாக தேவைப்படுகிறது. பள்ளி விடுமுறை காலம் என்பதால் குழந்தைகளுக்கு மீன் உணவுகள் நிறைய சேர்த்துக் கொடுக்கலாம் என்றால் மீன்பிடி தடைக்காலத்தால் மீன்கள் விலை அதிகமாக இருக்கிறது. எனவே மீன்பிடி தடைக்காலத்தை அக்டோபர், நவம்பர் மாதங்களில் மாற்றியமைக்க வேண்டும்.

படகுகள் பாதுகாக்கப்படும்

கட்டுமாவடி பகுதியை சேர்ந்த சங்கரம்மாள்:- செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தமிழகத்திற்கு அதிக மழை தரக்கூடிய வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகும். அந்த மாதங்களில் மழை, புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்வது அதிகளவில் தடைப்படும். எனவே செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மீன்பிடி தடைக்காலத்தை ஏற்படுத்தினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்படாது. இதனால் மின்னல், இடி, புயல், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்களை பற்றி மீனவர்கள் கவலை பட மாட்டார்கள். இது போன்ற இயற்கை சீற்றங்களால் இந்த மாதங்களில் அதிகமான மீனவர்கள் பலியாகி இருக்கிறார்கள். இயற்கை சீற்றங்களில் இருந்து மீனவர்களின் உயிர்கள் பாதுகாக்கப்படுவதுடன், படகுகளும் பாதுகாக்கப்படும். எனவே மத்திய அரசும், மாநில அரசும் இதற்கு ஒரு தீர்வை ஏற்படுத்தி மீன்பிடி தடைக்காலத்தை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஏற்படுத்த வேண்டும்.

பரிசீலனை செய்ய வேண்டும்

ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர் பாலமுருகன்:- மீன்பிடி தடைக்காலம் 5 ஆண்டுகளுக்கு முன்பு 45 நாட்கள் மட்டுமே இருந்தது. அதனை தமிழக அரசு 61 நாட்களாக உயர்த்தியது. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. தடைக்காலத்தை உயர்த்திய அரசு நிவாரண தொகையை உயர்த்தவில்லை. ஆகையால் தமிழக அரசு 61 நாள் தடைக்காலத்தை 45 நாளாக குறைக்க வேண்டும். இல்லையெனில் தடைக்கால நிவாரண தொகையை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி தரவேண்டும். மீன்பிடி தடைக்காலம் மே, ஜூன் மாதங்களில் உள்ளதை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மாற்றி அமைக்க தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

அறிவியல்பூர்வ ஆய்வு

தமிழக மீன்வளத்துறை இணை இயக்குனர் (ஓய்வு) தில்லைகோவிந்தன்:- ‘கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இக்காலக்கட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்பதால் மீன்வளத்தை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் விசை படகுகள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டும் திருவள்ளூர் தொடங்கி கன்னியாகுமரி வரை மீனவர்கள் இந்த காலத்தில் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள். ஏப்ரல் முதல் ஜூன் வரை மீனவர்கள் தங்கள் விசை படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவார்கள். பொதுவாக மீன்கள் ஒரு இடத்தில் இல்லாமல் உணவைத் தேடி எப்போதும் வெவ்வேறு இடங்களுக்கு சென்று கொண்டே இருப்பது வாடிக்கைதான். இனப்பெருக்கத்திற்காகவும், மீன் உற்பத்தி அதிகரிப்பதற்காகவும் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து நாடு முழுவதும் உள்ள கடலோர பகுதிகளில் மீன்பிடி தடைக்காலத்துக்கான மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் காலநிலை மாற்றத்தால் தற்போது கடல்களில் மீன்கள் கிடைப்பதிலும் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக அரபிக்கடல் பகுதியில் கிடைக்கும் சாளை மீன்கள் தற்போது அதிகளவில் வங்காள விரிகுடா கடல் பகுதிகளிலும் கிடைக்கிறது. எனவே மீண்டும் அகில இந்திய அளவில் ஒரு பெரிய அளவில் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வரலாம். மாறாக அனுபவ பூர்வமாக எந்த முடிவும் எடுப்பது சரியாக இருக்காது'.

முடிவெடுக்க முடியாது

புதுக்கோட்டை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரி ஒருவர்:- புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை பகுதி கிழக்கு கடற்கரையை சோ்ந்ததாகும். மீன்பிடி தடைக்காலம் என்பது மீன்களின் இனப்பெருக்கத்திற்காக தான் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தீர்மானித்து தான் தடைக்காலம் நடைமுறையில் உள்ளது. மீன்பிடி தடைக்காலத்தை மாற்ற வேண்டும் என மீனவர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டாலும், அது பற்றி முடிவெடுக்க முடியாது''.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வஞ்சிரம் ரூ.2 ஆயிரம்
தமிழ்நாட்டில் விசை படகுகள் கடலுக்கு செல்லாது என்ற காரணத்தால் மீன் வரத்து படிப்படியாக குறையும். அதேபோல் ஆழ்கடலில் கிடைக்கும் மீன்கள் கிடைக்காது. இதனால் மீன் விலை உயரும். கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்கள் மற்றும் விசாகப்பட்டினத்தில் இருந்து மீன் கொண்டு வரப்படும். பொதுவாக வஞ்சிரம், வவ்வால், காலா, பன்னை, டூனா, டைகர் இறால், புளூ கிராப், மட் கிராப், லாப்ஸ்டர், கனவா, திருக்கை ஆகிய மீன் வகைகள் ஆழ்கடலில் கிடைக்கும் மீன்கள் ஆகும். இவை அனைத்தும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு பிற மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படும். மீன்பிடி தடை காலத்தில் அதிகபட்சமாக கிலோ வஞ்சிரம் ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படும். வெள்ளை வவ்வால் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்படும். சங்கரா ரூ.500 முதல் ரூ.600 வரை, இறால் ரூ.500 என விற்பனை செய்யப்படும். மீன்பிடி தடைக்காலத்தில் ஒரு சில மீன்கள் மட்டுமே கிடைக்கும் என்று மீனவ அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments