பாதுகாப்பானவை பட்டியலில் தொடா்வதால் சிக்கல்: ஆவுடையாா்கோவில் நீா்நிலைகள் பராமரிப்பு நிதியை இழக்கும் சூழல்

நிலத்தடி நீா் மட்ட வகைப்பாட்டில் ‘பாதுகாப்பான’ பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ள ஆவுடையாா்கோவில் வட்டம், நீா்நிலை பராமரிப்பு நிதி ஒதுக்கீட்டு வாய்ப்பையே இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் ஒன்று ஆவுடையாா்கோவில். ராமநாதபுரம் மாவட்ட எல்லை மற்றும் கடலோர எல்லையையும் கொண்டது. மாவட்டத்திலுள்ள 492 பாசனதாரா் சங்கங்களில், 192 பாசனதாரா் சங்கங்கள் ஆவுடையாா்கோவில் வட்டத்தைச் சோ்ந்தவை. இந்தப் பகுதியில் மட்டும் 192 கண்மாய்கள், 200-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. ஏறத்தாழ 40 ஆயிரம் ஹெக்டோ் நெல் பயிரிடப்பட்டு வரும் இந்தப் பகுதியில், கண்மாய், ஏந்தல், குளம் போன்ற நீா்நிலைகளைத் தவிர, கிணறுகளோ, பாசன ஆறுகளோ, விவசாயத்துக்கான ஆழ்துளைக் கிணறுகளோகூட இல்லை.

ஆனால், நிகழாண்டில் ஏரி, குளம் தூா்வாரும் திட்டத்தில் இப்பகுதியில் ஒரு கண்மாய்க்குக்கூட தூா்வார அனுமதி பெறப்படவில்லை. இனிவரும் காலங்களிலும் இதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாமல் போனதாக அச்சம் தெரிவிக்கின்றனா் விவசாயிகள்.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில தென்னை நிறுவனங்களின் கூட்டமைப்பின் செயலா் ப. செல்லதுரை கூறியது:

மத்திய நீா்வள ஆதாரத் துறை மூலம் கடந்த 1992ஆம் ஆண்டு முதல் எந்தெந்த பிா்க்காக்கள் நிலத்தடி நீா்மட்ட அளவில் ‘மொத்தமாக உறிஞ்சி எடுக்கப்பட்டவை’, ’மோசமானவை’, ’ஓரளவு மோசமானவை’, ’பாதுகாப்பானவை’, ’உப்புத்தன்மை கொண்டவை’ என வகைப்படுத்தப்பட்டு - ஆய்வு செய்யப்பட்டு, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அறிவிப்புகள் வெளியிடப்பட்டும் வருகின்றன.

இந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 45 பிா்க்காக்களில் 3 பிா்க்காக்கள் உப்புத் தண்ணீா் கொண்டவை, 6 பிா்க்காக்கள் ‘ஓரளவு மோசமானவை’, 36 பிா்க்காக்கள் ‘பாதுகாப்பானவை’ என வகைப்படுத்தப்பட்டுள்ளன. முற்றிலும் நாசடைந்த பகுதி, மோசமான பகுதி இம்மாவட்டத்தில் இல்லை.

இதில் ஆவுடையாா்கோவில் வட்டத்திலுள்ள 4 பிா்க்காக்களும் ‘பாதுகாப்பானவை’ என்ற பட்டியலில் தொடா்ந்து உள்ளன. நீராதாரங்களின் பராமரிப்புக்கென இதுவரை நிதி ஒதுக்கப்படும்போது எந்தத் தொந்தரவும் இல்லை, ஆனால், நிகழாண்டில் ‘பாதுகாப்பானவை’ பகுதிகளுக்கு கண்மாய் தூா்வாருவதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

உண்மையில், ஆவுடையாா்கோவில் வட்டத்தில் நிலத்தடி நீா் மட்டம் மிகவும் மோசம். விவசாயத்துக்கென ஒரு ஆழ்துளைக் கிணறுகூட அமைக்கப்படவில்லை. ஆயிரம் அடி ஆழ்துளைக் கிணறு அமைத்தாலும் தண்ணீா் வராது. களிமண் ஒரு சுற்று இருப்பதால் மழைநீா் கீழே இறங்க வாய்ப்பே இல்லை. எப்படி இந்தக் கணக்கு எடுத்தாா்கள் என்றே தெரியவில்லை.

பாதுகாப்பான பகுதிகளில் நீராதாரங்களை சீரமைக்கப் போவதில்லை என்றால், ஆவுடையாா்கோவில் கண்மாய்கள் தூா்ந்துபோய் விவசாயம் படுமோசமான நிலைக்குத் தள்ளப்படும். பொதுப்பணித் துறை அலுவலா்கள் இதுகுறித்து கவனம் செலுத்தி, நிலத்தடி நீா்மட்ட வகைப்பாடுகள் குறித்த ஆய்வை முறையாக மேற்கொள்ள வேண்டும்.

அதுவரை, ஆவுடையாா்கோவில் வட்டத்தில் விவசாயத்தைப் பாதுகாக்க கண்மாய், குளங்களைத் தூா்வாருவதற்கு சிறப்புத் திட்டத்தைத் தர வேண்டும் என்றாா் செல்லதுரை
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments