கட்டுமாவடியில் பேருந்து நிலையம் இன்றி பயணிகள் அவதி - நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை!



புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கட்டுமாவடி, கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) அமைந்துள்ள ஒரு மிக முக்கியமான சந்திப்பாகும். புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மூன்று மாவட்டங்களின் மக்கள் சங்கமிக்கும் இடமாக இது திகழ்கிறது.

பெரிய மீன் மார்க்கெட் 

மாவட்டத்திலேயே மிகப்பெரிய மீன் மார்க்கெட் இங்குதான் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு நாள்தோறும் தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதனை வாங்கவும், விற்பனை செய்யவும் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகளும், பொதுமக்களும் வந்து செல்கின்றனர்.

சாலையோரத்தில் நிற்கும் அவலம் 

மிகவும் பரபரப்பான பகுதியாக இருக்கும் கட்டுமாவடியில் தற்போது சாலையோரத்தில் ஒரு சிறிய பஸ் நிறுத்தம் மட்டுமே உள்ளது. இதனால் தினசரி பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்வோர் வெயிலிலும், மழையிலும் சாலையோரத்திலேயே பஸ்சிற்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

கழிப்பிட வசதி இல்லை 

வெளியூர்களிலிருந்து வரும் பயணிகள், குறிப்பாக பெண்கள் மற்றும் முதியவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க கழிப்பிட வசதி இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், பஸ்கள் சாலையோரம் நிறுத்தப்படுவதால் கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

பொதுமக்கள் கோரிக்கை 

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், "நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் மற்றும் ஆயிரக்கணக்கான வணிகர்கள் வந்து செல்லும் கட்டுமாவடியில் அடிப்படை வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த நவீன பஸ் நிலையம் அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். பயணிகள் அமருவதற்கான வசதி, சுத்தமான குடிநீர் மற்றும் நவீன கழிப்பிட வசதிகளுடன் இந்த பஸ் நிலையத்தை அமைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments