வடகிழக்கு பருவமழையின்போது மின் விபத்துகளை தவிர்ப்பது எப்படி? அதிகாரி விளக்கம்




வடகிழக்கு பருவ மழையின்போது மின் விபத்துகளை தவிர்ப்பது எப்படி? என்பது குறித்து புதுக்கோட்டை மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் சேகர் விளக்கம் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மின் விபத்துகள்

வடகிழக்கு பருவமழை, புயல் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளின் போது அறுந்து தரையில் விழுந்து கிடக்கும் மின் கம்பிகளினால் விபத்துகள் அதிகளவில் ஏற்படுகின்றன. இவ்வாறு ஏற்படும் மின் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மின்வழித்தட ஆய்வு மேற்கொண்டு மின் வழித்தடங்களின் தொய்வு, மரக்கிளைகளுக்கிடையேயான பாதுகாப்பு இடைவெளி, இன்சுலேட்டர்களின் சேதமின்மை போன்றவற்றை கண்காணித்திடவும், களப்பணியாளர்களை இயற்கை இடர்பாடுகளின் போது எந்நேரமும் முழுவீச்சில் செயல்படும் வகையில் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தரமான ஒயர்கள்

மின் கசிவினால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் விதமாக ஈ.எல்.சி.பி.யை (மின் கசிவு தடுப்பான்) பயனீட்டாளரின் வீடுகளில் உள்ள மெயின்சுவிட்ச் போர்டில் பயனீட்டாளர் பொருத்த வேண்டும். பயனீட்டாளர் வளாகத்தில் நில இணைப்புக் குழாய் நல் முறையில் நிறுவப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள நபர்கள் மற்றும் மின் ஒப்பந்ததாரர் மூலமாக மட்டுமே செய்யுங்கள். ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான ஒயர்கள் மற்றும் மின்சார சாதனங்களை மட்டுமே வாங்கி பயன்படுத்துங்கள்.

மின்சார பிளக்குகளை பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்யுங்கள். குளிர்சாதன பெட்டி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய 3 பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுங்கள்.

மின்கம்பிகள்

மின்பாதையில் மின்கம்பி அறுந்து கிடந்தால் பொதுமக்கள் அதனை தொடாமலும் அருகில் செல்லாமலும் உடனடியாக அருகே உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின்கம்பங்கள் பழுதடைந்த நிலையில் இருந்தாலோ மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் மின்கம்பிகள் தொய்வாக இருப்பதை கண்டறிந்தாலோ பொதுமக்கள் தொடாமல் உடனடியாக மின்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மின்வாரியத்தை சாராத நபர்கள் எவரும் மின்தடையை சரி செய்யும் பொருட்டு மின்கம்பத்திலோ, மின்மாற்றியிலோ ஏறி பணி செய்யக்கூடாது. மின் தடை ஏதும் ஏற்பட்டால் அருகே உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தெரிவித்து வாரிய பணியாளர் மூலம் மட்டுமே மின்தடையை சரி செய்து கொள்ள வேண்டும்.

கால்நடைகள்

டிராக்டர் மற்றும் லாரியில் கரும்பு போன்றவற்றை அளவுக்கு அதிகமாக ஏற்றி செல்லும் போது அருகே உள்ள மின்பாதை மின்கம்பிகள் மீது உரசாமல் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். பொதுமக்கள் மின்பாதைக்கு அருகில் கட்டிடம் கட்டும் போது மின்பாதையிலிருந்து போதிய இடைவெளி விட்டு கட்ட வேண்டும். மின்பாதையின் அருகே செல்லாமலும் மின்பாதையை தொடாமலும் மிகவும் கவனமாக கட்டுமான பணியை செய்ய வேண்டும். மின்கம்பங்களில் விளம்பர பதாகைகள் அல்லது துணி உலர்த்துகின்ற கம்பிகள் ஏதும் கட்டக்கூடாது. பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான ஆடு, மாடு முதலிய கால்நடைகளை மின்கம்பத்திலோ அல்லது இழுவை கம்பியிலோ கட்டுவதை தவிர்க்க வேண்டும். பயிர்களை விலங்குகளிடமிருந்து பாதுகாக்க வயல்களில் மின் வேலிகள் அமைப்பது சட்டப்படி குற்றமாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments