4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இருந்து சவுதி அரேபியாவுக்கு நேரடி விமான சேவை




சென்னையில் இருந்து 4 ஆண்டுகளுக்கு பிறகு சவுதி அரேபியாவுக்கு நேற்று முதல் நேரடி விமான சேவை தொடங்கியது.

சவுதி அரேபியாவுக்கு விமான சேவை

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகருக்கு சவுதி ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் நேரடி விமான சேவையை இயக்கி வந்தது. கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக ஜெட்டா நகருக்கு நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது.

இதனால் சென்னையில் இருந்து புனித உம்ரா பயணத்துக்கு செல்பவர்களும், வேலைக்காக செல்பவர்களும் குவைத், பக்ரைன், துபாய், இலங்கை வழியாக செல்ல வேண்டி நிலை இருந்தது. இதனால் சவுதி அரேபியாவுக்கு செல்ல 13 மணி நேரம் ஏற்படுவதால் நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் அபூபக்கர் கோரிக்கை வைத்தார்.

4 ஆண்டுகளுக்கு பிறகு...

இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் சவுதி ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மீண்டும் சென்னையில் இருந்து ஜெட்டா நகருக்கு நேரடி விமான சேவையை தொடங்கியது. இந்த விமான சேவை வாரத்தில் 2 நாட்கள் இயக்கப்படுகிறது.

நேரடியாக விமான சேவையை தொடங்கியதால் நேற்று சென்னையில் இருந்து சென்ற விமானத்தில் 215-க்கும் மேற்பட்ட புனித உம்ரா பயணிகள் புறப்பட்டு சென்றனர். அவர்களுக்கு இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் அபூபக்கர் வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் நிருபர்களிடம் அபூபக்கர் கூறியதாவது:-

பயண நேரம் குறையும்

சென்னையில் இருந்து ஜெட்டாவுக்கு நேரடி விமான சேவை பல ஆண்டுகளுக்கு பிறகு இயக்கப்படுகிறது. இதன் மூலம் சென்னையில் இருந்து ஜெட்டாவுக்கு 5½ மணி நேரத்தில் சென்றுவிடுவதால் பயண நேரம் குறைவதுடன், பணமும் மிச்சம் ஆகும். நேரடி விமான சேவையை தொடங்க உதவிய பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியா உம்ரா, ஹஜ் துறை மந்திரிக்கும் தமிழக மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

2024-ம் ஆண்டு ஹஜ் பயணம் 100 சதவீதம் டிஜிட்டல் செய்யப்பட்டு உள்ளது. இந்தியா முழுவதும் இருந்து 1 லட்சத்து 35 ஆயிரம் ஹஜ் விண்ணப்பங்கள் வந்து உள்ளது. தமிழகத்தில் ஹஜ் விண்ணப்பங்கள் வழங்க இன்னும் 17 நாள் கால அவகாசம் உள்ளது. இதுவரை தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹஜ் விண்ணப்பங்கள் வந்து உள்ளன.

கூடுதல் ஒதுக்கீடு

இந்த ஆண்டு ஹஜ் பயண ஒதுக்கீடு கூடுதலாக கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. ஜனவரி 19-ந் தேதி நடைபெற உள்ள உலக இஸ்லாமிய கவுன்சில் கூட்டத்தில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியுடன் நானும் பங்கேற்க உள்ளேன். இந்திய ஹஜ் பயணிகளுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மானியம் நிறுத்தப்பட்டு விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை- ஜெட்டா நேரடி விமான சேவை புனித பயணம் செல்லும் இஸ்லாமியர்களுக்கும், வேலைக்காக செல்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments