மக்களிடம் பேதங்கள் ஏற்பட வழிவகுக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி





மக்களிடம் பேதங்கள் ஏற்பட வழிவகுக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களிடம் பேதங்கள் ஏற்பட இந்த சட்டம் வழிவகுக்கும் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, 1955-ம் ஆண்டு முதன் முதலில் குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர் 1987-ம் ஆண்டு சில நிபந்தனைகளுடன் இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டது.

குடியுரிமை திருத்த சட்டம்

கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத அடக்குமுறைக்கு உள்ளாகி, அங்கிருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து குடியேறிய இந்து, கிறிஸ்தவர், சீக்கியர், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த மசோதா வழிவகை செய்தது.

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது.

மத்திய அரசு அறிவிப்பு

இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டதுடன் சட்டம் உடனடியாக அமலுக்கு வந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு கேரளா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மேலும், தங்கள் மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தப்போவதில்லை என்றும் அறிவித்து உள்ளன. தற்போது, தமிழக அரசும் இதே கருத்தை முன்மொழிந்துள்ளது.

இது தொடர்பாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மக்கள் நலனுக்கு எதிரானது

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய இறுதி நாட்களில் மத்திய பா.ஜனதா அரசு இருந்துவரும் வேளையில், பல்வேறு தரப்பு மக்களாலும் எதிர்க்கப்பட்ட, குடியுரிமை திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்திட அவசர கதியில் நேற்று (நேற்று முன்தினம்) அறிவிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல; பலவகையான மொழி, இன, மதம் மற்றும் வாழ்விட சூழல் ஆகியவற்றால் வேறுபட்டிருந்தாலும், ஒன்றுபட்ட உணர்வுடன் வாழ்ந்துவரும் இந்திய மக்களின் நலனுக்கும், இந்திய தாய்த்திருநாட்டின் பன்முகத் தன்மைக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் முற்றிலும் எதிரானதாகும்.

மக்களை திசை திருப்பும் நோக்கம்

அதுமட்டுமல்ல; சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் முகாம்வாழ் தமிழர்களின் நலனுக்கும் எதிரானதுதான் இந்தச் சட்டம். இதன் காரணமாகத்தான், தி.மு.க. அரசு அமைந்தவுடனேயே, அதாவது, கடந்த 8-9-2021 அன்று சட்டசபையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, அரசின் சார்பாக நான் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து, அதனை நிறைவேற்றி, இச்சட்டத்தினைத் திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசுக்கு அதனை அனுப்பி வைத்தோம். தமிழ்நாட்டைப் போலவே, பல்வேறு மாநிலங்களும் இதனை எதிர்த்து குரல் கொடுத்து வந்துள்ளன.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் கண்டனத்தில் இருந்து தப்பிப்பதற்காக மக்களை திசைதிருப்பும் நோக்கத்துடன், தேர்தல் அரசியலுக்காக இந்தச் சட்டத்தை தற்போது நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதோ என கருத வேண்டியிருக்கிறது.

தமிழ்நாட்டில் இடமில்லை

இந்திய மக்களிடையே பேதங்களைத் தோற்றுவிக்க வழிவகை செய்யும் இந்தச் சட்டத்தால் எந்தவிதமான நன்மையோ, பயனோ இருக்கப் போவதில்லை. இந்தச் சட்டம் முற்றிலும் தேவையற்ற ஒன்று என்பதுடன், ரத்து செய்யப்பட வேண்டியது என்பதுதான் இந்த அரசின் கருத்தாகும்.

எனவே, மத்திய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது; இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது என்பதனை தமிழ்நாட்டு மக்களுக்கு நான் இந்த நேரத்தில் உறுதியாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments