நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு தேர்தல் ஆணையம் தகவல்




நாடாளுமன்ற பொதுத்தேர்தல் தேதி இன்று (சனிக்கிழமை) அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல்

தற்போதைய 17-வது நாடாளுமன்றத்தின் பதவி காலம் வருகிற ஜூன் மாதம் 16-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு, புதிய அரசு பொறுப்பு ஏற்க வேண்டும். எனவே 18-வது நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை கடந்த ஆண்டு முதலே இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தேர்தல் கமிஷனர்கள் சுற்றுப்பயணம் செய்து, தேர்தலை நடத்துவது குறித்து ஆய்வு நடத்தினர். அனைத்து அரசியல் கட்சியினரிடமும் கருத்துக்களை கேட்டறிந்தனர். அனைத்து முன்னேற்பாடுகளும் முடிந்த நிலையில், அரசியல் கட்சியினர் ஒரு புறம் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என மும்முரமாக உள்ளனர். இந்தநிலையில் எப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இன்று அறிவிப்பு

இதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில், இந்திய தேர்தல் ஆணையம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டது.அதாவது இன்று (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு, 18-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று அந்த சமூகவலைத்தள பதிவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக தேர்தல் ஆணைய அலுவலகமான டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் அருணாசல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. மேலும் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

எத்தனை கட்டங்களாக நடைபெறும்?

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அறிவிப்பு மார்ச் மாதம் 10-ந்தேதி வெளியானது. ஏப்ரல் மாதம் 11-ந்தேதி முதல் மே மாதம் 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மே 23-ந்தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2019-ம் ஆண்டு 2-ம் கட்ட தேர்தலில் அதாவது ஏப்ரல் 18-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

அதுபோல் இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் எத்தனை கட்டங்களாக நடைபெறும் என்று தெரியவில்லை. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள், தலைமை தேர்தல் கமிஷனரிடம் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2 தேர்தல் கமிஷனர்கள் பொறுப்பு ஏற்றனர்

இதனிடையே காலியாக இருந்த 2 தேர்தல் கமிஷனர்கள் பதவிக்கு ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் நேற்றுமுன்தினம் நியமிக்கப்பட்டனர். இதற்கான உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறப்பித்தார். இதையடுத்து புதிய தேர்தல் கமிஷனர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் நேற்று காலை பதவி ஏற்றுக் கொண்டனர்.

எனவே இன்று தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமாருடன், புதிதாக பதவி ஏற்ற 2 கமிஷனர்களும் இணைந்து தேர்தல் தேதியை அறிவிக்கிறார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments