இந்தியாவின் அதிக தூரம் பயணிக்கும் ரயலான கன்னியாகுமரி - திப்ரூகர் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் இனி வாரத்தில் 5 நாட்கள் இயங்கும்



இந்தியாவின் அதிக தூரம் பயணிக்கும் ரயலான கன்னியாகுமரி - திப்ரூகர் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்பட்ட நிலையில் இனி வாரத்தில் 5 நாட்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக பல்வேறு ரயில் பாதைகள் இருந்தாலும் மிக நீண்ட ரயில் பயணம் செல்ல வேண்டும் என்றால் கன்னியாகுமரியிலிருந்து அசாம் மாநிலத்தில் உள்ள திப்ரூகர் என்ற இடத்துக்கு செல்லும் விவேக் எக்ஸ்பிரஸில் தான் ஏற வேண்டும்.

2011ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் இந்த வாராந்திர ரயில் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் பயணிக்கும் தூரம் 4273 கி.மீ ஆகும்.

கன்னியாகுமரியிலிருந்து கிளம்பும் இந்த ரயில் நாகர்கோவில் வந்து திருவனந்தபுரம் செல்கிறது. அங்கிருந்து கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு வழியாக மீண்டும் தமிழகத்திற்குள் வருகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வரை வந்து ஆந்திராவுக்குள் நுழைகிறது. ரேணிகுண்டா, நெல்லூர், விஜயவாடா என பயணித்து பல்வேறு மாநிலங்களை கடந்து 4273 கி.மீ பயணித்து அசாம் மாநிலம் திப்ரூகர் செல்கிறது. இதற்கான பயண நேரம் என்பது 80 மணி நேரம் 15 நிமிடங்கள். கிட்டதட்ட நான்கு நாள்கள் பயணம்.

2020ஆம் ஆண்டு ரயில்வே வரியம் இந்த கன்னியாகுமரி – திப்ரூகர் வாராந்திர ரயிலை வாராந்திர ரயில் சேவையிலிருந்து தினசரி ரயிலாக மாற்றம் செய்யப்படும் என்று அறிவித்தது. 

இதன்படி கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்துக்கு நான்கு நாட்கள் ரயிலாக இயங்கி வருகின்றது.

தற்போது வாரத்திற்கு நான்கு நாட்கள் செல்லும் இந்த ரயில் மார்ச் 25 முதல் வாரத்தில் 5 நாட்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

9 மாநிலங்கள், 4,273 கி.மீ தூரம், 83 மணி நேர பயணம்: இந்தியாவின் மிக நீண்ட ரயில்வே பாதை பற்றி அறிவோமா?

பயண வசதியும், கையடக்கச் செலவும் கொண்டதால் இந்திய மக்களின் முதன்மையான பொதுப் போக்குவரத்துத் தேர்வு அன்றும், இன்றும், என்றும் ரயில்தான். அது பாசஞ்சர் ரயில், மோனோ ரயில், மெட்ரோ ரயில் என்று பரிணாம வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கக் காரணம் மக்களின் ஆதரவுதான்.

இந்தியாவில் கிழக்கும் மேற்கும், வடக்கும் தெற்கும் ரயில்கள் பாய்ந்து கொண்டிருந்தாலும் திப்ருகாரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ரயில் பாதை தான் நாட்டின் மிக நீண்ட ரயில் பாதையாக அறியப்படுகிறது.

இந்தப் பாதை வழி நெடுகிலும் வெவ்வேறு பருவநிலை, வெவ்வேறு நிலப்பரப்பு, வெவ்வேறு மொழிப் பிராந்தியங்கள் என தேசத்தின் கலாச்சாரத்தை நம் கண் முன் கடை விரிக்கிறது. திப்ருகர் டூ கன்னியாகுமர் ரயிலுக்கு ‘தி விவேக் எக்ஸ்பிரஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தி விவேக் எக்ஸ்பிரஸ்: தி விவேக் எக்ஸ்பிரஸ் பற்றி அறிவோமா? - இதுதான் இந்தியாவின் மிக நீண்ட ரயில்வே பாதை. ஒட்டுமொத்தமாக 4,273 கி.மீ பயண தூரம் கொண்டது. 80 மணி நேரம் 15 நிமிடங்கள் பயண நேரம். வடகிழக்கு மாநிலத்தில் வடக்கு எல்லையான அசாமின் திப்ருகர் நகரையும் தமிழ்நாட்டின் கடைக்கோடி பகுதியான கன்னியாகுமரியையும் இணைக்கிறது.

விவேக் எக்ஸ்பிரஸ் நவம்பர் 2011 முதல் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு இது பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது.

கரோனா உச்சம்தொட்டபோது நாடு முழுவதும் பல்வேறு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. அப்போது கடைசியாக விவேக் எக்ஸ்பிரஸ் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.


9 மாநிலங்கள்: இந்த ரயில் அசாம், நாகலாந்து, பிஹார், மேற்குவங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா ஆகிய 9 மாநிலங்களின் வழியாக பயணிக்கிறது. அந்தந்த மாநிலங்களில் தீன்சுகியா, டிமாபூர், குவாஹாட்டி, பொங்கைகான், அலிபுர்தார், சிலிகுரி, கிஷன்கஞ்ச், மால்டா, ராம்புர்ஹத், பாகூர், துர்காபூர், அசன்சால், காரக்பூர், பாலாசோர், கட்டாக், புவனேஸ்வர், கோர்தா, பிரம்மாபூர், ஸ்ரீகாகுளம், விஜியநகரம், விசாகப்பட்டினம், சாமல்கோட், ராஜமுந்திரி, எலூரு, விஜயவாடா, ஆங்கோல், நெல்லூர், ரேணிகுண்டா, வேலூர், சேலம், ஈரோடு, கோயமுத்தூர், பாலக்காடு, திரிசூர், அலுவா, எர்ணாகுளம், கோட்டயம், செங்கனூர், கொல்லம், திருவனந்தபுரம், நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

உலகின் மிக நீண்ட ரயில் பாதை: இந்தியாவின் மிக நீண்ட ரயில் பாதையை அறிந்துகொண்ட நாம் உலகின் மிக நீண்ட ரயில்.பாதையை அறிவோமா? - அது ரஷ்யாவில் உள்ளது. இந்த ரயில் பயணம் 6 நாட்கள் நீடிக்கும். வெவ்வேறு டைம் ஜோன்களில் பயணிக்கும். இது மேற்கு ரஷ்யாவை நாட்டின் கிழக்கு முனையுடன் இணைக்கிறது. மாஸ்கோவில் தொடங்கும் பயணம் ஆறு நாட்களின் முடிவில் வ்ளாடிவோஸ்தக் நகரில் முடியும். பயண தூரம் 9,250 கிலோ மீட்டர். இந்தியா உலகின் மீண்ட ரயில் பாதை கொண்ட தேசமாக மாற இன்னும் 4977 கிலோ மீட்டர் தூரம் பயணப் பாதையை நீட்டிக்க வேண்டும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments