வெயிட்டிங் லிஸ்ட்.. ரயில்வே சம்பாதித்தது இத்தனை ஆயிரம் கோடியா? பகல் கொள்ளை என நெட்டிசன்கள் புலம்பல்



சென்னை: டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்கள், அதனை கேன்சல் செய்ததன் மூலம் ரயில்வே துறைக்கு கடந்த 3 ஆண்டுகளில் 1229 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதை கேட்டு நெட்டிசன்கள் இது பெரிய பகல் கொள்ளை என்று புலம்பி வருகிறார்கள்.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் என்றால் ரயில்வே துறை தான்.. பல லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள், கோடிக்கணக்கான மக்கள் தினமும் பயணிக்கிறார்கள். இந்த உலகத்திலேயே கடினமான விஷயம் எது என்று ரயிலில் பயணிப்போரிடம் கேட்டால் தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்வது தான் என்று கூறுவார்கள். தட்கல் டிக்கெட் புக்கிங் மற்றும் ரயில் டிக்கெட் புக்கிங்கின் போது இடம் கிடைக்காமல் காத்திருப்பு பட்டியலில் இடம் பெற்றவர்கள். அதனை கேன்சல் செய்வார்கள்.. அப்படி டிக்கெட் கிடைக்காமல் கேன்சல் செய்ததன் மூலம் ரயில்வே கடந்த 3 ஆண்டுகளில ரூ.1229 கோடி சம்பாதித்துள்ளது. இந்த தகவல் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் விவேக் பாண்டே என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்ற தகவலின் படி, ரயில்வே டிக்கெட்டுகளை ரத்து செய்வது இந்திய ரயில்வேக்கு ஒரு முக்கிய வருவாய் ஆதாரமாக உருவெடுத்திருப்பது தெரிகிறது. ஏனெனில் 2021 மற்றும் 2024 ஆண்டுக்கு இடையில், ரத்து செய்யப்பட்ட காத்திருப்பு பட்டியல் டிக்கெட்டுகளின் மூலம் ரயில்வே 1,229 கோடி ரூபாயை ஈட்டியுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரயில்வேயின் இந்த பதிலை பார்க்கும் இது பல ஆண்டுகளாக ரயில் டிக்கெட் ரத்து செய்வதன் மூலம் ஈட்டப்படும் வருமானம் தொடர்ந்து அதிகரித்து வருவது தெரிகிறது.

ரயில்வேயின் ஆர்டிஐ பதில் மூலம் தெரிய வருவது என்ன?

ரயில்வேயின் ஆர்டிஐ பதிலின் படி, 2021 ஆம் ஆண்டில், காத்திருப்போர் பட்டியலில் உள்ள மொத்தம் 2.53 கோடி டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டன. இதன் மூலம் ரயில்வேக்கு ரூ.242.68 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 2022 ஆம் ஆண்டில், ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கை 4.6 கோடியாக உயர்ந்தது. இதன் காரணமாக வருவாய் அந்த ஆண்டு ரூ.439 கோடியாக உயர்ந்துள்ளது. இதேபோல், 2023ல், மொத்தம் 5.36 கோடி ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளில் இருந்து ரயில்வே 505 கோடி ரூபாய் ஈட்டியிருப்பது தெரியவந்ததுள்ளது. அதேநேரம் கடந்த ஜனவரி மாதத்தில் (2024) கூட, ரத்து செய்யப்பட்ட 45.86 லட்சம் டிக்கெட்டுகளின் வருமானம் 43 கோடி ரூபாய் ஆகும்

கடந்த ஆண்டு தீபாவளியின் போது, நவம்பர் 5 முதல் நவம்பர் 17 வரையிலான காலக்கட்டத்தில், ரயில்வேயில் டிக்கெட் ரத்து செய்யப்பட்டதில் கணிசமான பணம் கிடைத்திருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் கன்பார்ம் ஆன டிக்கெட் ரத்து, ஆர்ஏசி டிக்கெட் ரத்து மற்றும் காத்திருப்புப் பட்டியலில் உள்ள டிக்கெட் ரத்து செய்தல் என மொத்தம் 96.18 லட்சம் டிக்கெட்டுக்ள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது . இப்படி ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளிலிருந்தும் 10.37 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

சரி, ரயில் டிக்கெட் ரத்து கட்டணம் எவ்வளவு தெரியுமா?

ரயில் டிக்கெட்டுகளுக்கான ரத்து கட்டணங்கள், பயணத்தில் வெறும் ஸ்லிப்பர், 3வது ஏசி, 2வது ஏசி, 1வது ஏசி, 2ம் வகுப்பு உட்காரும் இருக்கை, எக்ஸிகியூட்டிவ் சேர் கார் என பல்வேறு வகுப்புகளின் படி தீர்மானிக்கப்படுகிறது. ரயில் புறப்படுவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்னதாக உறுதிசெய்யப்பட்ட டிக்கெட் ரத்து செய்யப்பட்டால், குறைவான கேன்சல் கட்டணங்கள் கழிக்கப்படும். எந்த வகுப்புக்கு எவ்வளவு கேன்சல் கட்டணம் என்பதை பாருங்கள்.

ஏசி முதல் வகுப்பு/எக்ஸிகியூட்டிவ் வகுப்பிற்கு ரூ.240/-
ஏசி 2 அடுக்கு/முதல் வகுப்புக்கு ரூ.200/-
ஏசி 3 டயர்/ஏசி நாற்காலி கார்/ ஏசி 3 எகானமிக்கு ரூ.180
ஸ்லீப்பர் வகுப்பிற்கு ரூ.120/-
இரண்டாம் வகுப்புக்கு ரூ.60/-.
RAC/காத்திருப்புப் பட்டியலில் உள்ள டிக்கெட் ரத்து செய்யப்பட்டால், ஒரு பயணிக்கு ரூ.60 கழிக்கப்படும்.

ஐஆர்சிடிசி இ- டிக்கெட்டுகள்

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (IRCTC) மூலம் ஆன்லைனில் வாங்கப்படும் இ-டிக்கெட்டுகள் சேவைக் கட்டணத்துடன் வரும். இந்த டிக்கெட் ரத்துசெய்யப்பட்டால் பணம் திரும்ப கிடைக்காது . அதேபோல் தட்கலில் டிக்கெட் கன்பார்ம் ஆன பின்னர் கேன்சல் செய்யவே முடியாது. அப்படி கேன்சல் செய்தால் ஒரு ரூபாய் கூட கிடைக்காது. அதேநேரம் ஐஆர்சிடியில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது யுபிஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகள், நெட் பேங்கிங் மற்றும் பிற கட்டணம் செலுத்தும் முறையைப் பொறுத்து, சேவைக் கட்டணத் தொகை ரூ.10 முதல் 30 வரை வசூலிக்கப்படுகிறது,

இதனிடையே டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்கள், அதனை கேன்சல் செய்ததன் மூலம் ரயில்வே துறைக்கு கடந்த 3 ஆண்டுகளில் 1229 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ள தகவலை கேட்டு நெட்டிசன்கள் புலம்பி வருகிறார்கள்.இது எல்லாம் பகல் கொள்ளை என்று குமுறுகிறார்கள்..

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments