ஆர்.புதுப்பட்டினம் கிராமத்தில் துணி காயவைக்க சென்றபோது பரிதாபம்: மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு காப்பாற்ற முயன்ற கர்ப்பிணி படுகாயம்




கம்பி வேலியில் துணி காயவைக்க சென்றபோது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தார். காப்பாற்ற முயன்ற கர்ப்பிணி படுகாயமடைந்தார்.

மின்சாரம் பாய்ந்தது

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளை மீரான். இவரது மனைவி ராவீயத்தம்மாள் (வயது 50). இவர்களது மகள் தஸ்லிமா (26). இவருக்கு திருமணம் நடைபெற்று கர்ப்பிணியாக தாய் வீட்டில் உள்ளார். இந்நிலையில், நேற்று காலை ராவீயத்தம்மாள் தனது வீட்டின் அருகே உள்ள கம்பி வேலியில் துணி காய போட சென்றுள்ளார்.

அப்போது கம்பி வேலியில் மின் கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதனை கவனிக்காமல் கம்பி வேலியை அவர் தொட்டுள்ளார். உடனே அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனைப் பார்த்த அவரது மகள் தஸ்லிமா அவரை காப்பாற்ற சென்றுள்ளார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டதில் மயங்கினர்.

பெண் உயிரிழப்பு

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் தாய்-மகள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராவீயத்தம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். படுகாயமடைந்த தஸ்லிமாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த மீமிசல் போலீசார் விரைந்து வந்து ராவீயத்தம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாடு பலி

மேலும் கம்பி வேலியில் மாடு ஒன்று உரசியதில் மாடும் செத்தது. மின்சாரம் பாய்ந்து இறந்த ராவீயத்தம்மாள் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். இவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே மின்சார வாரியம் மற்றும் அரசு அவரது குடும்பத்திற்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேக்தாவுதின் B.SC.LLB, மற்றும் மாவட்ட தலைவர் (தமுமுக) முஸ்லிம் தெரு. R.புதுப்பட்டிணம், அவர்கள் அளித்த  புகார் மனுவிற்கு பதில் அளித்த கொடிக்குளம் உதவி மின் பொறியாளர் 

உதவி மின்பொறியாளர் / இயக்கலும் & காத்தலும் / கொடிக்குளம் பிரிவு அலுவலகத்திற்கு உட்டபட்ட நாட்டாணிபுரசக்குடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட R.புதுப்பட்டிணம் கிராமத்தில் உள்ள மீமிசல் SS XII 250KVA / 11KV மீன்மாற்றிக்கு போடப்பட்ட இழுவைக்கம்பி அறுந்து விழுந்து, அருகில் உள்ள விளையாட்டுத் திடல் மைதானத்தில் போடப்பட்ட வேலியில் பட்டு, அதில் துணி உலர்த்த வந்த திருமதி ராவியத்அம்மாள் க/பெ.வெள்ளைமீரான என்பவர் இறந்துவிட்டார் எனவும், திருமதி வெ.ராவியத்அம்மாள் மகள் திருமதி.தஸ்லிமாபானு க/பெமுகமது ஷாதரத் என்பவர் மின் அதிர்ச்சி ஏற்பட்டு அரசு மருத்துவமனை அறந்தாங்கியில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரியவருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வண்ணம் வாரிய விதிகளின் படி மூன்று மாத காலத்திற்குள் மின்மாற்றியை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனையும், மேற்படி ஊரில் உள்ள பழுது மின்கம்பங்கள், மின்கம்பிகள் மற்றும் இழுவைக் கம்பிகள் ஆகியவற்றை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும், மேலும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபர் மற்றும் கால்நடை உரிமையாளருக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனையும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments