அறந்தாங்கி அருகே பரிதாபம்: கோங்குடி வெள்ளாற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி




அறந்தாங்கி அருகே கோங்குடி வெள்ளாற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

கல்லூரி மாணவர்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சன்னதி வயல் தெருவை சேர்ந்தவர் கொதரத் முகமது (வயது 45), எலக்ட்ரீசியன். இவருக்கு அப்துல் (22), அபூபக்கர் (18) ஆகிய 2 மகன்கள். இதில் அப்துல் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். அபூபக்கர் புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த இப்ராம்சா மகன் அப்துல் பாசித் (17), அப்துல் கபூர் மகன் ஜாசிக் முகமது (16), பாரூக் மகன் முபிஸ் (15), நைனா முகமது மகன் சபிக் (17) ஆகியோருடன் கோங்குடி வெள்ளாற்றில் குளிப்பதற்காக நேற்று மாலை 5.30 மணியளவில் 2 மோட்டார் சைக்கிள்களில் சென்றார்.

ஆற்றில் மூழ்கி பலி

பின்னர் அவர்கள் 5 பேரும் கோங்குடி வெள்ளாற்று பாலத்தில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அபூபக்கருக்கு நீச்சல் தெரியாததால் திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.

இதனால் அவரது நண்பர்கள் சத்தம்போட்டனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் அறந்தாங்கி தீயணைப்பு வீரர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரில் மூழ்கிய அபூபக்கரை தேடிப்பார்த்தனர். ½ மணி நேரம் நடத்திய தேடுதல் வேட்டையில் அபூபக்கர் பிணமாக மீட்கப்பட்டார்.

பிரேத பரிசோதனை

இதையடுத்து அறந்தாங்கி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments