புதுக்கோட்டையில் ஆசிரியை வீட்டில் திருடிய வாலிபர் 24 மணி நேரத்தில் கைது 36 பவுன் நகை மீட்பு




புதுக்கோட்டையில் ஆசிரியை வீட்டில் திருடிய வாலிபர் 24 மணி நேரத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 36 பவுன் நகை மீட்கப்பட்டது.

நகைகள் திருட்டு

புதுக்கோட்டை கணேஷ்நகர் 1-ம் வீதியை சேர்ந்தவர் ஜான் தேவசகாயம் (வயது 56). பாதிரியாரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு தனது மனைவி ஆசிரியையான எஸ்தருடன் கோவையில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது.

மேலும் பீரோக்களில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. அதில் இருந்த நகைகளும் திருட்டு போயிருந்தது. இதில் 45 பவுன் நகைகள் திருடு போனதாக அவர் அளித்த புகாரின் பேரில், கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு மர்மநபரை வலைவீசி தேடினர்.

36 பவுன் நகை மீட்பு

இந்த நிலையில் திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய மதுரை திருமங்கலம் அருகே குத்தியார்குண்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த கேதீஸ்வரன் என்கிற சந்திரகுமாரை (34) போலீசார் நேற்று கைது செய்தனர்.

மேலும் கைதான இலங்கை தமிழரிடம் இருந்து 36 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் மதிப்புள்ள வைரநெக்லஸ் ஆகியவற்றை மீட்டனர். திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட நபரை 24 மணி நேரத்தில் கைது செய்த தனிப்படையினர் மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பாராட்டினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments