ஏசியுடன் ஸ்மார்ட் வகுப்பறையாக - தமிழகத்தில் முதல்முறையாக அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி




தமிழகத்தில் முதல்முறையாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ஏசி வசதியுடன் ஸ்மார்ட் வகுப்பறையாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் சு.திருநாவுக்கரசரின் முயற்சியால் 1981-ல் அரசு பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்பட்டது. இக்கல்லூரிக்கு 1984-ல் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. 40 ஏக்கரில் உள்ள இக்கல்லூரியில் 5 பாடப் பிரிவுகள் உள்ளன. ஆண்டுதோறும் மொத்தம் 520 மாணவர்களை சேர்க்க இடங்கள் உள்ளன. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை குறைந்தது. மேலும், பரந்து விரிந்த கல்லூரி வளாகமெங்கும் புதர்மண்டி, கட்டிடங்கள் உள்ள பகுதிகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தன.


இதனிடையே, கல்லூரியில் கடந்த சில மாதங்களாக முழுஅளவில் சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டதுடன், அரசு நிதி மற்றும் முன்னாள் மாணவர்களின் ஒத்துழைப்புடன் அனைத்து வகுப்பறைகளிலும் ஃபால் சீலிங், எல்இடிமின் விளக்குகள், தொடுதிரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள எந்த அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும் இல்லாத அளவுக்கு இக்கல்லூரி மேம்படுத்தப்பட்டுள்ளதால், நிகழாண்டு கல்லூரியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என கல்லூரி நிர்வாகத்தினர் எதிர்பார்க் கின்றனர்.


இது குறித்து  கல்லூரி முதல்வர் குமார் கூறியது: இக்கல்லூரியில் 2006-ம்ஆண்டு படித்த மாணவர்கள் என்னை கல்லூரிக்கு வந்து சந்தித்தனர். அவர்களது முயற்சியால் கல்லூரியின் முன்பகுதி அழகுபடுத்தப்பட்டு பூங்கா அமைக்கப்பட்டது. அதன் பிறகு, கல்லூரி வளாகம் முழுவதும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், வெவ்வேறு காலக்கட்டத்தில் கல்லூரிக்கு வந்த முன்னாள் மாணவர்களின் ஒத்துழைப்பு மற்றும் அரசின் நிதி ஆகியவற்றை கொண்டு அனைத்து வகுப்பறைகளிலும் ஏசி, ஸ்மார்ட் போர்டு, மின்விசிறிகள், எல்இடி மின் விளக்குகள், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வகுப்பறைகளின் அருகிலேயே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வளாகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலவிதமான பழக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மூலிகைத் தோட்டம், பூந்தோட்டம், காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கையான சூழலில், நவீன தொழில்நுட்பத்தில் மாணவர்கள் கற்கக்கடிய இடமாக கல்லூரி மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கல்லூரியில் தீத்தடுப்பு மற்றும் தையல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கென வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தி, வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வேறு எந்தக் கல்லூரியிலும் இல்லாத அளவுக்கு இக்கல்லூரியில் தொழில் நுட்ப வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நிகழாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாணவர்கள் இக்கல்லூரியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments