தஞ்சையில் பள்ளி வேன் மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு: அக்காவை அழைக்க தாத்தாவுடன் வந்தபோது பரிதாபம்




தஞ்சையில், பள்ளி வேன் மோதி 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது. அக்காவை அழைக்க தாத்தாவுடன் வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

2 வயது குழந்தை

தஞ்சை நடராஜபுரம் இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் இளையராஜா(வயது 40). தொழில் மேம்பாட்டு பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி அபிநயா. இவர்களுக்கு 4 வயதில் சாய்வெண்பா, 2 வயதில் தியாலினி என்ற இரு மகள்கள். இவர்களில் சாய்வெண்பா, தஞ்சையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறாள்.

நேற்று முன்தினம் சாய்வெண்பா பள்ளியில் இருந்து வேனில் வீட்டிற்கு வந்தாள். அவளை அழைப்பதற்காக சாய்வெண்பாவின் தாத்தா பழனிவேல் சென்றார். அவருடன் 2 வயது குழந்தை தியாலினியும் சென்றது.

வேன் மோதி பலி

வீட்டின் அருகே உள்ள நிறுத்தத்தில் பள்ளி வேன் நின்றது. இதனால் சாய்வெண்பாவை அழைத்து செல்வதற்காக பழனிவேல் வேனின் பக்கவாட்டில் நின்று கொண்டு இருந்தார். அப்போது வேனின் முன்பக்க சக்கரம் அருகே குழந்தை தியாலினி நின்று கொண்டு இருந்ததாக தெரிகிறது. குழந்தை நின்று கொண்டு இருந்தது தெரியாமல் டிரைவர் வேனை இயக்கியதாக தெரிகிறது.

இதனால் குழந்தை தியாலினி மீது வேனின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்து கதறிய தியாலினியை அக்கம், பக்கத்தினர் உதவியுடன் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சோகம்

இது குறித்த புகாரின் பேரில் தஞ்சை போக்குவரத்து புலன் விசாரணை பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் கள்ளப்பெரம்பூர் மேலத்தெருவை சேர்ந்த கார்த்திகேயன்(35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அக்காவை அழைக்க னெ்ற 2 வயது குழந்தை வேன் மோதி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments