வீடு கட்ட ரசீது கேட்டு வந்தவரிடம் ரூ.1,250 லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை




வீடு கட்ட ரசீது கேட்டு வந்தவரிடம் ரூ.1,250 லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்ட ஊராட்சி செயலாளர்

தஞ்சையை அடுத்த மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிலிப்ராஜ். இவர் கடகடப்பை ஊராட்சிக்குட்பட்ட மல்லிகா நகரில் தனது மகள் வீடு கட்டுவதற்கு பல்வகை ரசீது கோரி ஊராட்சி செயலாளர் அந்தோணிசாமியை அணுகினார்.

அதற்கு அந்தோணிசாமி ரூ.2 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும். அந்த பணத்தை தஞ்சை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்படக்கூடிய பனகல் கட்டிட வளாகத்துக்கு கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளார்.

போலீசில் புகார்

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பிலிப்ராஜ் தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவி ரூபாய் நோட்டுக்களை பிலிப்ராஜிடம் கொடுத்து அந்தோணிசாமியிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தினர்.

அதன்படி நேற்று மாலை ரசாயன பவுடர் தடவிய ரூ.1,250-ஐ எடுத்துக் கொண்டு தஞ்சை பனகல் கட்டிட வளாகத்திற்கு பிலிப்ராஜ் சென்றார்.

கைது

போலீஸ் துணை சூப்பிரண்டு நந்தகோபால், இன்ஸ்பெக்டர்கள் பத்மாவதி, அருண்பிரசாத் மற்றும் போலீசார் பனகல் கட்டட வளாத்திற்குள் மறைந்திருந்து கண்காணித்தனர்.

அப்போது அந்தோணிசாமியிடம் முதல் கட்டமாக பிலிப்ராஜ் ரூ.1,250-ஐ கொடுத்தார். அந்த பணத்தை அந்தோணிசாமி வாங்கியவுடன் அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து வந்து கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments