வரைவு பட்டியல் வெளியீடு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 13,54,752 வாக்காளர்கள் ஆண்களை விட பெண்கள் அதிகம்




வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 லட்சத்து 54 ஆயிரத்து 752 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண்கள் அதிகம் ஆவார்கள்.

வரைவு பட்டியல் வெளியீடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்கத்திருத்தம் 2025-க்கான வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் அருணா நேற்று வெளியிட்டார். அதனை மாவட்ட வருவாய் அதிகாரி ராஜராஜன் பெற்றுக்கொண்டார். அதன்பின் கலெக்டர் தெரிவித்ததாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 6 லட்சத்து 69 ஆயிரத்து 474 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 85 ஆயிரத்து 211 பெண் வாக்காளர்களும், 67 திருநங்கைகளும் என மொத்தம் 13 லட்சத்து 54 ஆயிரத்து 752 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் போது 13 லட்சத்து 45 ஆயிரத்து 361 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

கடந்த மார்ச் 17-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 29-ந் தேதி வரை நடைபெற்ற 2024-ம் ஆண்டிற்கான தொடர் திருத்தத்தின் போது 6,018 ஆண் வாக்காளர்கள், 6,547 பெண்கள் வாக்காளர்கள், 10 திருநங்கைகள் என மொத்தம் 12 ஆயிரத்து 575 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

3,543 பேர் நீக்கம்

மேலும் 1,623 ஆண் வாக்காளர்கள், 1,918 பெண் வாக்காளர்கள், 2 திருநங்கைகள் என மொத்தம் 3,543 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 947 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன.

விண்ணப்பம் பெறுவதற்கு ஆணையத்தால் வகுக்கப்பட்ட காலமான நேற்று முதல் வருகிற 28-ந் தேதி வரையிலும் ஜனவரி 1-ம் தேதி, ஏப்ரல் 1-ந் தேதி, ஜூலை 1-ந் தேதி, அக்டோபர் 1-ந் தேதி ஆகிய தேதிகளை 18 வயது பூர்த்தியடைந்த தகுதியான வாக்காளர்களிடமிருந்து முன்னதாக படிவங்களை பூர்த்தி செய்துபெறலாம். இந்த படிவங்கள் சம்பந்தப்பட்ட நபரின்பிறந்த நாளை வைத்து தகுதியேற்படுத்தும் நாட்கள் அடிப்படையில் அந்தந்த காலாண்டில் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படும்.

சிறப்பு முகாம்கள்

வாக்காளர்களின் வசதிக்கேற்ப வருகிற 16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் 947 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்களில் நடைபெறும். 2025-ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் 6-ந் தேதி வெளியிடப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வாக்காளர்கள் தங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா? என சரி பார்த்து கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகளை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

13,363 இளம் வாக்காளர்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் 18 முதல் 19 வயதுடைய இளம் வாக்காளர்களில் ஆண்கள் 7,543 பேரும், பெண்கள் 5,820 பேரும் என மொத்தம் 13,363 பேர் உள்ளனர். இதில் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அதிகமாக 2,849 பேரும், அதற்கு அடுத்தப்படியாக புதுக்கோட்டை தொகுயில் 2,555 பேரும், திருமயத்தில் 2,158 பேரும், ஆலங்குடியில் 2,012 பேரும், அறந்தாங்கியில் 1,949 பேரும், கந்தர்வகோட்டையில் (தனி) 1,840 பேரும் உள்ளனர்.

85 வயதிற்கு மேற்பட்டவர்கள் 15,365 பேர்
வரைவு பட்டியலில் மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்டவர்களில் 7,035 ஆண்களும், 8,329 பெண்களும், ஒரு திருநங்கையும் என மொத்தம் 15,365 வாக்காளர்கள் உள்ளனர். இதில் சட்டமன்ற தொகுதிகளில் கந்தர்வகோட்டையில் (தனி) 2,407 பேரும், விராலிமலையில் 1,737 பேரும், புதுக்கோட்டையில் 2,968 பேரும், திருமயத்தில் 3,765 பேரும், ஆலங்குடியில் 2,074 பேரும், அறந்தாங்கியில் 2,414 பேரும் உள்ளனர். மாற்றுத்திறனாளிகளில் 5,631 ஆண்களும், 4,146 பெண்களும் என மொத்தம் 9,777 பேரும் உள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments