புதிய பஸ் நிலையத்தில் சேதமடைந்த கட்டிடங்கள் விரைவில் அகற்றம்: அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தற்காலிக பஸ் நிலைய பணிகள் மும்முரம்




புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் சேதமடைந்த கட்டிடங்கள் விரைவில் அகற்றப்படுகிறது. இதையடுத்து அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

புதிய பஸ் நிலையம்

புதுக்கோட்டை மாநகராட்சி புதிய பஸ் நிலையத்தில் உள்ள கட்டிடங்கள் பல்வேறு இடங்களில் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. கட்டிடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ததில், கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில், ஸ்திரத்தன்மை குறைந்ததால், அதனை இடித்து அகற்ற என்ஜினீயர்கள் குழுவினர் தெரிவித்தனர்.

மேலும் புதிய பஸ் நிலையத்தின் வளாகத்தில் உள்ள கடைகளில் சில இடங்களில் மேற்கூரையின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்த சம்பவமும் நடந்தது. இதனால் புதிய பஸ் நிலையத்தில் கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கியது.

தற்காலிக பஸ் நிலையம்

இதையடுத்து புதிய பஸ் நிலையத்தில் சேதமடைந்த கட்டிடங்களை இடித்து அகற்றப்படும் போது, பஸ்கள் இயக்க வசதியாக தற்காலிக பஸ் நிலையம் அமைக்க அருகே உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை இடம் தேர்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசு போக்குவரத்து கழக பணிமனையின் வளாகத்தில் ஒரு பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக இரும்பு கம்பிகள் ஊன்றி மேற்கூரை அமைக்கும் பணி நடைபெறுகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘புதிய பஸ் நிலையத்தில் சேதமடைந்த கட்டிடங்களை இடித்து அகற்றும் பணி விரைவில் தொடங்க உள்ளது. அதன்பின் புதிய கட்டிடம் கட்டப்படும். இதற்கிடையில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணி முடிவடைந்ததும் கட்டிடங்கள் இடித்து அகற்றும் பணி தொடங்கும்'' என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments