வசதி படைத்தவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க தடை: தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி



வசதி படைத்தவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த சமூக சேவகர் டேனியல் ஜேசுதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ''பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து பணத்தையும் பட்டுவாடா செய்து வருகிறது.கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் முழுமையடையவில்லை. அதற்கான நிதியிலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநிலத்தில் சுமார் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்குவது அரசுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்திவிடும். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கிடைத்த புள்ளிவிபரத்தில் தமிழகத்தின் வரி வருவாய் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 616 கோடி என்றும் பற்றாக்குறை ரூ. 3 லட்சத்து 55 ஆயிரத்து 845 கோடி என தெரியவந்துள்ளது. தமிழகத்தின் கடன் மட்டும் ரூ.43 ஆயிரத்து 962 கோடியாகும்.இந்த வகையில் அதிக கடன் உள்ள மாநிலங்களான மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை தமிழகம் முந்தியுள்ளது. மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதில் எந்த மாற்றுக்கருத்தோ, முரண்பாடோ இல்லை. அதே நேரத்தில் நிதிப்பற்றாக்குறை உள்ள நிலையில் இந்த பரிசுத்தொகை தேவையா என்ற கேள்வி எழுகிறது. எனவே, பொங்கல் பண்டிகை பரிசுத்தொகை ரூ.1000 வழங்குவதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது.


இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு நேற்று நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அரசு வக்கீலை பார்த்து, ''பொங்கல் பரிசாக பச்சரிசி, கரும்பு, வெல்லம், முந்திரி ஆகிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் தலா ரூ. 1000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 2 கோடியே 3 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். கணக்கிட்டு பார்த்தால் சுமார் 2500 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த தொகையை அரசியல் கட்சிகள் நிதியில் இருந்து கொடுத்தால் கேள்வி கேட்க மாட்டோம். ஆனால் அரசு பணம், மக்களின் பணம். மருத்துவமனைகள், சாலை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளுக்கு பணத்ைத செலவிடலாம். தமிழகம் முழுவதும் அனைவரும் பொங்கல் கொண்டாடுகின்றனரா? வறுமை கோட்டுக்குகீழ் உள்ளவர்களுக்கு பொங்கல் கொண்டாட ரூ.1000 வழங்குவதில் தவறில்லை, அதுகுறித்து கேள்வி எழுப்பவும் இல்லை. அதே நேரத்தில் வறுமை கோட்டை தாண்டி நல்லவசதி படைத்தவர்கள், நீதிபதிகள், வக்கீல்கள், அதிகாரிகளுக்கு வழங்குவதை ஏற்க முடியாது'' என்றனர்.

அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, இந்த பணம், மக்களுக்கு வழங்கப்படுவது அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், கொள்கை முடிவு சட்ட விரோதமாக இருக்கும் பட்சத்தில் பொதுமக்கள் நலன்கருதி அதில் நீதிமன்றம் தலையிடும். எனவே யாரெல்லாம் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கிறார்கள்? யாரெல்லாம் அந்த நிலை தாண்டி உயர்நிலைக்கு வந்துள்ளார்கள் என்பதை அளவீட்டு தான் கொள்கை முடிவுகளை அரசு எடுத்திருக்க வேண்டும்.  ஆனால் ஒட்டு மொத்தமாக கொள்கை முடிவு என்று அனைவருக்கும் பொங்கல் பரிசாக வழங்குவதை ஏற்க முடியாது என்றனர்.

இதையடுத்து, நீதிபதிகள் அளித்த உத்தரவில், ' பொதுமக்களின் பணம் எந்த பலனையும் ஏற்படுத்தாத விஷயத்திற்காக வீணடிக்கப்படுகிறது என்பதற்கான முகாந்திரம் உள்ளது. எனவே, இந்த வழக்கில் இடைக்காலத் தடை விதிக்கவும் முகாந்திரம் உள்ளது. எனவே, மாநில அரசு முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் வைத்திருப்போர் (அரிசி தவிர பிற அத்தியாவசிய பொருட்கள்), மற்றும் எந்த பொருளும் இல்லாத முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் வைத்திருப்போர் தவிர மற்ற அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கலாம்.  வழக்கு வரும் பிப்ரவரி 6ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்படுகிறது' என்று கூறப்பட்டுள்ளது.

மேல்முறையீடு செய்யவில்லை அட்வகேட் ஜெனரல் தகவல்
முன்னுரிமையற்ற எந்த பொருளும் ரேஷனில் பெற முடியாத குடும்ப அட்டைதாரர்களுக்கும், அரிசி தவிர மற்ற பொருட்களை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த தீர்ப்பு குறித்து அட்வகேட் ஜெனரல் கூறும்போது, 'உயர் நீதிமன்ற உத்தரவின்படி சுமார் 10 லட்சம் பேருக்கு மட்டுமே இந்த பொங்கல் பரிசு வழங்க முடியாது. மீதமுள்ள சுமார் 1 கோடியே 90 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெரும்பாலானவர்கள் பயனடைகிறார்கள். எனவே, இதில் மேல்முறையீடு செய்ய தேவையில்லை என்றார்.



யாருக்கு கிடைக்கும் ரூ.1000?

* தமிழகத்தில் 2 கோடியே 99,980 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். 

* அரிசி தவிர பிற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சர்க்கரை வாங்கும் முன்னுரிமை இல்லாதவர்கள் 10 லட்சத்து ஆயிரத்து 605 குடும்பங்கள்.

* எந்த பொருளும் இல்லாத முன்னுரிமையற்றவர்கள் 41,106 குடும்ப அட்டைதாரர்கள்.

* மொத்தம் 10 லட்சத்து 42 ஆயிரத்து 711 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

* மீதமுள்ள 1 கோடியே 90 லட்சத்து 57 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு கிடைக்கும்.

Post a Comment