புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை முதல் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம்



புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமா மகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி 16 வது சுற்று 08.03.2019 முதல் தொடங்கி தொடர்ச்சியாக 21 நாட்கள் போடப்படவுள்ளது. கோமாரி நோய் கால்நடைகளில் கடுமையான தாக்கத்தையும் விவசாயிகளுக்கு கடும் பொருளாதார இழப்பினையும் ஏற்படுத்தும். கோமாரி நோய் வைரஸ் எனப்படும் நச்சுயிரியால் ஏற்படுகிறது. இந்நோய் கால் மற்றும் வாய் நோய், காணை மற்றும் கசப்பு நோய் எனவும் அழைக்கப்படுகிறது. கோமாரி நோய் பாதிக்கப்பட்ட கால்நடையிலிருந்து இதர கால்நடைகளுக்கு பரவுகிறது. மேலும், இந்நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் உமிழ்நீர், கழிவுகள், கால்நடைகளை கையாள்வோர், தீவனத்தட்டு மற்றும் பண்ணை பொருட்கள் மூலம் பரவுகிறது. இந்நோய் இளங்கன்றுகளிலிருந்து வயதான கால்நடைகள் வரை பாதிக்கக் கூடியது.

கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் கீழ்காணும் அறிகுறிகள் தென்படும்:

காய்ச்சல், தீவனம் திண்ணாமை, வாயிலிருந்து நுரையுடன் கூடிய நூல் போன்று எச்சில் ஒழுகுதல், கால் குளம்புகள், வாய், உதடு, நாக்கு மற்றும் மடிப்பகுதி ஆகிய இடங்களில் கொப்புளம் உண்டாகி, புண் ஏற்பட்டு தோல் உரிதல் ஆகிய அறிகுறிகள் ஏற்படும். மேலும் இளங்கன்றுகளில் இறப்பு நேரிடும். கறவை மாடுகளில் பால் குறையும், சினை பிடிக்கும் திறன் குறையும் மற்றும் சினைப் பசுக்களில் கருச்சிதைவு ஏற்படும் எருதுகளில் வேலைத்திறன் குறையும். நோயிலிருந்து மீண்ட கால்நடைகள் இளைத்து, வெயில் தாக்கத்தினை பொறுக்க முடியாமல் கடுமையாக மூச்சு வாங்கும். தீவனம் சரிவர உண்ணாமல் இருக்கும். நோயுற்ற கால்நடைகளை தனியே பிரித்து வைத்து பராமரிக்க வேண்டும். தடுப்பூசி போடுவது ஒன்றே இந்நோயிலிருந்து கால்நடைகளை பாதுகாப்பதற்கான வழியாகும்.

நோயுற்ற கால்நடைகள் பராமரிப்பு நோய் வந்த கால்நடைகளை தனியே பிரித்துக் கட்டி பராமரித்தல், கஞ்சி உணவாக அளிக்க வேண்டும். 1 சதவீதம் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கிருமி நாசினி கரைசலைக் கொண்டு கால்நடைகளின் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும். கால்நடைகளில் பாதிப்பு ஏற்பட்டவுடன் அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி 08.03.2019 முதல் தொடங்கி தொடர்ச்சியாக 21 நாட்கள் அனைத்து கிராமங்களிலும் போடப்படவுள்ளது. கால்நடை வளர்ப்போர், முகாம் நடைபெறும் இடத்திற்கு தங்கள் கால்நடைகளை தவறாமல் கொண்டு சென்று தடுப்பூசி போட்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமா மகேஸ்வரி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments