ஐஏஎஸ், ஐ.பி.எஸ். தேர்வு முடிவுகள் வெளியீடு: இந்தியா முழுதும் 759 பேர் தேர்ச்சி: தமிழகத்தில் 35 பேர் தேர்ச்சி



ஐஏஎஸ், ஐபிஎஸ் என குடிமைப்பணிகளுக்கான சிவில் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் தமிழகத்திலிருந்து 35 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு தேர்வாணையம் குடிமைப்பணிக்கான பல துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப  தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த முதல்நிலைத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். யூபிஎஸ்சி நடத்தும் இந்த தேர்வில் இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.

மத்திய அரசு தேர்வாணையம் கடந்த ஆண்டு குடிமைப்பணி அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வை நடத்தியது. இந்த தேர்வில் இந்தியா முழுவதும் மொத்தமாக லட்சக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்து தேர்வு எழுதியிருந்தனர்.  நடந்து முடிந்த ஐஏஎஸ் தேர்வுகளின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில் தமிழகத்திலிருந்து தேர்வெழுதிய பலர் தேர்வாகியுள்ளனர். சென்னை ஷெனாய் நகரில் உள்ள சந்தோஷ் சபரி அகடாமியிலிருந்து 2 பேர் தேர்வாகியுள்ளனர். இந்த பயிற்சி அகாடமியில் இந்த ஆண்டு நடந்த குரூப் 1 தேர்வில் 35-க்கும் மேற்பட்டோர் தேர்வாகினர். ( காவல்துறை டிஎஸ்பி, துணை வட்டாட்சியர் உள்ளிட்ட பணிகள்) அதேபோன்று ஆஃபிசர்ஸ் அகாடமியிலிருந்து பலர் தேர்வாகியுள்ளனர். இன்னும் முழுமையான முடிவுகள் வந்த பின்னரே தமிழகத்திலிருந்து எத்தனைப்பேர் தேர்வாகியுள்ளனர் என்கிற விபரம் தெரியவரும்.

தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. அதில் இந்தியா முழுதும் தேர்வெழுதியவர்களில் 755 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் ஐஏஎஸ் பணிக்கு மொத்தம் 180 பேர் தேர்வாகியுள்ளனர். இதில் பொதுப்பிரிவிலிருந்து 91 பேரும், பிற்படுத்தப்பட்டோர் 48 பேரும் தலித்துகள் 27 பேரும், மலைவாழ் மக்கள் 14 பேரும் தேர்வாகியுள்ளனர். இவர்கள் உத்தரகாண்ட் மாநிலம் மிசௌரிக்கு பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள்.

அடுத்து இந்திய வெளியுறவுத்துறைக்கான ஐ.எப்.எஸ் பணிக்காக மொத்தம் தேர்வானவர்கள் 30 பேர் பொதுப்பிரிவில் 15 பேரும், பிற்படுத்தப்பட்டோர் 9 பேரும் தலித் மாணவர்கள் 5 பேரும் மலைவாழ் மக்கள் பிரிவில் ஒருவரும் தேர்வாகியுள்ளனர். இவர்கள் புது தில்லி சாணக்யபுரிக்கு பயிற்சிக்கு செல்வார்கள்.

அடுத்து இந்திய காவல்பணிக்கான தேர்வில் (ஐபிஎஸ்) 150 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் பொதுப்பிரிவு மாணவர்கள் 75 பேரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 42 பேரும், தலித் மாணவர்கள் 24 பேரும், மலைவாழ் மக்கள் பிரிவு மாணவர்கள் 9 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் பயிற்சிக்காக ஹைதராபாத் அனுப்பப்படுவார்கள்.

இதுகுறித்து சந்தோஷ்-சபரி  பயிற்சி மைய இயக்குனர் சபரிநாதனிடம் பேசியபோது கூறியதாவது.

இந்த ஆண்டு குடிமைப்பணி தேர்வில் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதா?

அப்படி ஒன்றும் இல்லை, ஒவ்வொரு ஆண்டும் 750 லிருந்து 900 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அதே அளவுதான் உள்ளது.

தமிழகத்திலிருந்து எத்தனைப்பேர் தேர்வாகியுள்ளனர்?

தமிழகத்திலிருந்து 35 பேர் தேர்வாகியுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட குறைவுதான்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments