புதுக்கோட்டை மாவட்டத்தில் தாய்ப்பால் முக்கியத்துவம் குறித்து 2 வாரங்களுக்கு விழிப்புணர்வு



குழந்தைகளுக்கு ஏற்படும் தீவிர வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துதல் மற்றும் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவித்தல் தொடர்பான இரண்டு வார விழிப்புணர்வு முகாம் வரும் மே 28ஆம் தேதி தொடங்கி ஜூன் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில்  விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கும் விதமாகவும் அந்த முகாம் அமையும்.

வயிற்றுப்போக்கால் ஏற்படும் உயிரிழப்பை தடுப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். வயிற்றுப்போக்கானது பாதுகாப்பற்ற குடிநீர் மற்றும் சுகாதாரமற்ற உணவின் வழியே நுண்கிருமிகள் உடலுக்குள் செல்வதால் ஏற்படுகிறது. இவ்வாறு வயிற்றுப்போக்கினால் ஏற்படும் நீர் இழப்புதான் குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணமாக அமைகிறது.

எனவே இதைத் தடுக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் வீடு, வீடாக சென்று உப்பு- சர்க்கரைக் கரைசல் பொட்டலங்கள் வழங்கப்பட உள்ளன. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மற்றும் 12 அரசு மருத்துவமனைகள், 73 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 253 துணை சுகாதார நிலையங்கள், 3 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 1,799 அங்கன்வாடி மையங்களிலும் நாள்தோறும் உப்பு- சர்க்கரைக் கரைசல் விநியோகிக்கப்படும்.

இதேபோன்று தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்தும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நலக்கல்வி அளிக்கப்பட உள்ளது. இம்முகாமின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 5 வயதுக்குள்பட்ட 1.33 லட்சம் குழந்தைகள் பயன்பெற உள்ளனர் என்றார் உமாமகேஸ்வரி. இக்கூட்டத்தில் மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் சந்திரசேகரன், பொது சுகாதாரத் துறை துணை இயக்குநர் டாக்டர் பரணிதரன், புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொ) ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments