புதுக்கோட்டை மாவட்ட கடலோரப் பகுதிகளில் அலையாத்தி காடுகளை உருவாக்கத் திட்டம்



புயல் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில், புதுக்கோட்டை மாவட்ட கடலோரப் பகுதிகளில் அலையாத்திக் காடுகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற காடு வளர்ப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் வனப்பரப்பை அதிகரிக்கும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் காலியாக உள்ள நிலங்களில் மரங்களை வளர்க்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாவட்டத்திலுள்ள கடலோரப் பகுதிகளில் புயல் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் அலையாத்திக் காடுகள் மற்றும் சவுக்குத் தோப்புகளை உருவாக்கிட வனத்துறை மூலம் திட்டமிடப்பட்டு வருகிறது. முதலில் இதற்கான வாய்ப்புள்ள இடங்களைத் தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்கும். காடுகளை உருவாக்க வனத்துறை எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்துக்கும் வருவாய்த் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

Post a Comment

0 Comments