புதுக்கோட்டை மாவட்ட கட்டிட உரிமையாளர்கள் வாடகை ஒப்பந்தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்: கலெக்டர் தகவல்!



வாடகைதாரர்கள் மற்றும் கட்டட உரிமையாளர்கள் தங்களது வாடகை ஒப்பந்தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் இலுப்பூர் வருவாய் கோட்டங்களில் புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, கந்தர்வக்கோட்டை மற்றும் கறம்பக்குடி வட்டங்களுக்கு புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியரும், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி வட்டங்களுக்கு அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியரும், குளத்தூர், இலுப்பூர், பொன்னமராவதி மற்றும் விராலிமலை வட்டங்களுக்கு இலுப்பூர் வருவாய்க் கோட்டாட்சியரும் வாடகை பதிவு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் நகரப் பகுதிகளுக்கு மட்டும் வாடகைப் பதிவு அலுவலர்களாகப் பணியாற்றுவர். முந்தைய வாடகைக் கட்டுப்பாடு, தமிழ்நாடு கட்டடங்கள் குத்தகை மற்றும் வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் 1960-இல் திருத்தங்கள் செய்து தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் சட்டம் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 2017 -இல் இயற்றப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் மற்றும் அதற்கான விதிகளை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இச் சட்டம்  2019 பிப்ரவரி 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. வாடகைதாரர்கள் மற்றும் கட்டட உரிமையாளர்கள் இச்சட்டத்தினை நடைமுறைப்படுத்த வாடகை ஒப்பந்தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு  w‌w‌w.‌t‌e‌n​a‌n​c‌y.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

Post a Comment

0 Comments