சென்னை அருகே வாகன விபத்து..கீழக்கரை மற்றும் அதிரையை சேர்ந்த மாணவர்கள் 2 பேர் உயிரழப்புசென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அதிகவேகமாக சென்ற கார் சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சென்னை வண்டலூர் அருகே இயங்கிவரும் கிரசண்ட் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 7 பேர் சக நண்பனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக சனிக்கிழமை இரவு கிழக்குக் கடற்கரை சாலைக்கு சென்றுள்ளனர்.

பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய மாணவர்கள், அதிகாலை 2 மணியளவில் ஈஞ்சம்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும் தடுப்புச்சுவரில் மோதிய வேகத்தில், சில மீட்டர் தூரத்துக்கு உருண்டு சென்றுள்ளது. இந்தக் கோர விபத்தில் அகமது பாகிம் மற்றும் முகமது சபின் ஆகிய 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் 4 மாணவர்கள் படுகாயங்களுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுள் ஒரு மாணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே விபத்து தொடர்பான சிசிடிவிக் காட்சிகள் வெளியாகியுள்ளன.

காரை ஓட்டிய மாணவர் சீட்பெல்ட் அணிந்திருந்ததால் லேசான காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார். அதிவேகமாக காரை ஓட்டிச் சென்றதே விபத்துக்கான காரணமாக கூறப்படுகிறது.

காரை ஓட்டிச் சென்ற மாணவரை கைது செய்துள்ள காவல்துறையினர், அவர் மீது அதிவேகமாக வாகனத்தை இயக்குதல், விபத்து ஏற்படுத்தி மரணத்தை விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வார இறுதி நாட்களில் மதுபோதையில் ஏற்படும் விபத்துக்களை தடுப்பதற்காக நகரின் பிரதான சாலைகளில் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபடுவது வழக்கம். நள்ளிரவு வரை முழுவீச்சில் நடைபெறும் வாகன தணிக்கையில் நள்ளிரவுக்கு பின்னர் தொய்வு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

மாணவர்கள் சென்ற கார் நள்ளிரவுக்கு மேல் அதிகாலையில் விபத்துக்குள்ளானதால், வாகன தணிக்கையில் ஏற்பட்ட தொய்வின் காரணமாகவே விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. எனவே வார இறுதி நாட்களில் பெரும்பாலானோர் அதிகம் விரும்பிச் செல்லும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் காவல்துறையினர் விடிய விடிய தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments