ஆவுடையார்கோவில் ஒன்றிய பொறியாளரை மிரட்டும், அதிமுக ஒன்றிய செயலாளர்!புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அதிமுக ரத்தினசபாபதி. ஜெ மறைவுக்கு பிறகு  அதிமுகவில் பிளவு ஏற்பட்ட போது பிளவுகளை சரி செய்து இரு அணிகளையும் ஒன்றாக இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தோல்வியுற்றார். இதனால் தினகரன் அணியில் பயணித்தார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு 18 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி பறிப்பு தீர்ப்பிற்கு பிறகு மீண்டும் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.  இவரை அழைத்துச் சென்று முதலமைச்சர் எடப்பாடியை சந்திக்க செய்தது அமைச்சர் விஜயபாஸ்கர்.  இவர் ஒதுங்கி இருந்த காலங்களில் அறந்தாங்கி தொகுதியில் அரசு நலத்திட்டங்கள் ஏதும் நடைபெறவில்லை என தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.

அவர் இணைந்த பிறகாவது கிடப்பில் போடப்பட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தொகுதி மக்கள் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் தொடர்ந்து எம்எல்ஏ இரத்தினசபாபதி கட்சிக்காரர்களால் புறக்கணிக்கப்பட்டு வருவதோடு கட்சியின் நிர்வாகிகளால் அவமதிக்கப்பட்டும் வருகிறார்.  தற்போது சிறிய விபத்தில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டு வீட்டில் ஓய்வில் இருக்கும் நிலையில் கூட அவரைப் பார்க்க  அதிமுக நிர்வாகிகள் செல்லவில்லை.

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் இரத்தினசபாபதியை சந்திக்க கட்சி நிர்வாகிகளுக்கு தடைபோடும் சக்தி யார்?  என்ற கேள்வி அவரது ஆதரவாளர்களிடம் எழுந்துள்ளது.

அரசு ஊழியரை மிரட்டும், ஒன்றிய செயலாளர்! பரபரப்பு ஆடியோ...இந்த நிலையில்தான் கட்சி நிர்வாகிகளால் தொடர்ந்து அவமதிக்கப்பட்டும் வருகிறார்.  கடந்த மாதம் டாஸ்மாக் பார் பிரச்சனை தொடர்பாக மணமேல்குடி அதிமுக ஒன்றியச் செயலாளர் துரைமாணிக்கத்தின்  ஆதரவாளரான குமார் என்கிற டிரைவிங் ஸ்கூல் அசோக்குமார் டாஸ்மாக் ஊழியரிடம் போனில் பேசும்போது சட்டமன்ற உறுப்பினர் ஒரு ஆளே இல்லை என்று அவமதித்து பேசினார்.  இந்த ஆடியோ பரபரப்பாக சமூக வலைதளங்களில் பரவி வந்தது.

இந்தப் பிரச்சனை அடங்குவதற்கு முன் கடந்த சில நாட்களாக ஆவுடையார்கோயில் அதிமுக ஒன்றிய செயலாளர் கூத்தையா ஒன்றியத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 27 பணிகளில் 3 பணிகளை தான் பெற்று தனது ஆதரவாளரான ஆறுமுகத்திடம் கொடுக்க அந்த பணிகளை பார்க்க அனுமதிக்கவில்லை என்று  ஆவுடையார்கோவில் ஒன்றிய பொறியாளர் குருநாதரிடம் போனில் பேசிய போது..

எம்எல்ஏ மச்சான் திமுககாரன் மனோகரனுக்கு வேலைகளை கொடுத்தீங்க இப்ப அவன் சொன்னானு ஆறுமுகத்தை வேலைய நிறுத்த சொல்றீங்க. ஒன்றியத்துல எந்த வேலையும் நடக்க கூடாது நாளை அமைச்சர் விஜயபாஸ்கரை பார்க்க போறேன் அவர் சொன்ன பிறகு தான் வேலை தொடங்கனும் என்று பேச..

அப்படி எல்லாம் வேலைகளை நிறுத்த முடியாதுங்க என்று பொறியாளர் சொல்லிவிட்டு எம்எல்ஏ சொல்றதை கேட்கிறதா? நீங்க சொல்றதை கேட்கிறதா? என்று கேட்க..
 

எம்எல்ஏ பெரிய ஆளே கிடையாது இங்கே நான் தான் எல்லாமே.. ஒன்றியம் சொல்றதை தான் கேட்கனும். நான் அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வர் எடப்பாடி ஆள். நீ எந்த வேலையும் பார்க்க கூடாது. உனக்கு அமைச்சர் டிரான்ஸ்பர் ஆர்டர் போடுவார் போ.. என்று கடுமையாக மிரட்டிவிட்டு துண்டிக்கிறார்.

இந்த ஆடியோ பற்றிய தகவல் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு போக ஒசெ மீது புகார் கொடுக்கவும் கூறியுள்ளார். இந்த தகவல் அறிந்து சமாதானம் பேசி வருகிறாராம் ஒ செ அறந்தாங்கி தொகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகள் அனைவருமே அமைச்சர் ஆதரவாளராக இருக்கும் நிலையில் அமைச்சரால் மீண்டும் கட்சிக்கு அழைத்துவரப்பட்ட சீனியரான எம்எல்ஏ ரெத்தினசபாபதி தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது ஏன்?

அதேபோல அவர் பெயரை பயன்படுத்தி அதிகாரிகளை கட்சி நிர்வாகிகள் மிரட்டப்படுவது அமைச்சர் விஜயபாஸ்கர் கவனத்துக்கு போனதா இல்லையா? இப்படியே போனால் கட்சி நிலைமை என்னாகும் என்கிறார்கள் ர ர க்கள்.

நன்றி: நக்கீரன்

Post a comment

0 Comments